பெருவெற்றி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ். இதுவரை ஏழு பருவங்கள் முடிந்துள்ள நிலையில், எட்டாவது பருவத்தை எதிர்பார்த்து பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், திடீர் அறிக்கையை வெளியிட்டு, பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கடந்த ஏழு பருவங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன், அடுத்த பருவத்தில் அதனைத் தொகுத்து வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஒரு விஷயத்தைச் சொல்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனாலும், வேறு வழி இல்லை. ‘பிக் பாஸ் 8’ நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கமாட்டேன். எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருப்பதால் பிக் பாஸ் தொடரிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.
“பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி,” என்று கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமையில் கமல் வந்து பேசுவதை பார்ப்பதற்கு மக்கள் நிறையவே ஆர்வமாக இருப்பார்கள்.
புத்தகப் பரிந்துரைகள், வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள், தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனைகள், தமிழ்ப் பற்று, தேசப்பற்று போன்றவை அனைத்தையும் வைத்து, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் தமது பணியை அவர் சரிவர செய்து வந்ததாக ரசிகர்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.
அத்துடன், எந்தப் பிரபலம் வந்தாலும் கமலைப்போல் தொகுத்து வழங்குவதில் சிறந்தவராக யாரும் இருக்க முடியாது என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு வேறு சில முன்னணி நட்சத்திரங்களுடன் விஜய் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அவ்வகையில், முன்னர் கமல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது பாதி நேரமாக தொகுத்து வழங்கிய சிம்புக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், முதல் தெரிவாக அவரிடம் விஜய் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாகத் தகவல்.
சூர்யா, விஜய் சேதுபதி, நயன்தாரா, அர்ஜூன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

