சென்ற வாரம் அவள் ஒரு தொடர்கதையில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் சிறந்த தத்துவப் பாடல்களில் ஒன்றைப் பார்த்தோம்.
அதற்கு சற்றும் சளைக்காத இன்னொரு பாடலையும் அந்தப் படத்துக்காக வரைந்திருக்கிறார் கவிஞர்.
படத்தின் கதாநாயகி ஊதாரியாகத் திரியும் அண்ணன், அவன் மனைவி, குழந்தைகளை மட்டும் பராமரிக்கவில்லை. அவள் தாய், சகோதரி, கண்பார்வை இல்லாத ஒரு தம்பி என ஒரு பெரிய குடும்பத்தையே காப்பாற்றி வருபவர்.
அந்தக் குடும்பத்துக்காகத் தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்கிறார் படத்தின் நாயகி. ஒருவராக அத்தனை சுமையையும் தாங்கும் அந்தப் பெண்ணுக்கு தனது நிலையை எண்ணி கோபம் வருவது நியாயமே. அவளது சுடுசொற்களைக் கண்டு அவள் நெருப்பைக் கக்குவதாக வீட்டிலுள்ளோர் கூறுவர்.
ஆனால், அவளது கனவுகள், வேதனை, கருணை மனது எல்லாம் அவளுக்கு மட்டும்தான் தெரியும். அதையும் கவிஞர் தனது ஒரு பாடலில் முழுமையாக விளக்குகிறார், பாடலைப் படத்தின் நாயகி பாடுவதாக வடித்திருக்கிறார்.
“கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும், கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும் என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும் கண்ணிலே...”
“நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும் அந்தக் குடும்பத்தில் உள்ள அக்கறை, பாசத்தினால்தானே அவள் ஒற்றை ஆளாக அதைத் தாங்கி நிற்கிறாள்.
அப்படித் தாங்கி நிற்பவளை எப்படி நெஞ்சில் ஈரமில்லாதவள் என்று சொல்ல முடியும்? அதுவும் தனது நெருப்பு அணைக்கின்ற நெருப்பு என்று அந்தப் பெண் வருணிக்கின்றாள். அவளுடைய சுமையைச் சேர்ந்து சுமக்க ஒருவன் வரும்போது அவள் கக்கும் நெருப்பும் அணைந்துவிடும்.
தொடர்புடைய செய்திகள்
அதைத்தான் அவள் யார் அணைப்பாரோ, இறைவனின் பொறுப்பு என்று விதியை நம்பி விட்டுவிடுகிறாள்.
அடுத்து, இதுவரை பட்டும் படாமலும் தனது சோகக் கதையை உதிர்க்கும் அந்தப் பெண் சற்று வெளிப்படையாகவே தனது ஆசை, தான் ஏன் அப்படி இருக்கிறோம் என்று கூறுகிறாள்.
“சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி மேனிக்குள் ஆடும் மனம் என்னும் ஞானி ஞானியின் மனமும் ஆசையில் தேனி நானொரு ராணி, பெண்களில் ஞானி என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்குத் தெரியும்...”
ஒரு ஞானியின் மனதுக்குள்ளும் தேனிபோல் ஆசை மண்டிக் கிடக்குமாம்.
அதுபோல்தான் தானும் என்று கூறும் கதாநாயகி, எப்படி தான் ராணிபோல் நடந்துகொண்டாலும், மனதிற்குள் ஆசைக்கு அடிபணிந்து கிடக்கும் அந்த ஞானியைப் போல் தனக்குள்ளும் ஆசை இருக்கிறது என்று சொல்கிறாள்.
இப்படியெல்லாம் தனது ஆற்றாமையை விளக்கும் அந்த மாது இறுதியில் எதிர்காலம் பற்றிய வந்தாலும் வரலாம், வராமல் போனாலும் போகலாம் என்று நல்ல நாள்களை மட்டுமே நம்பி வாழ்வதை இனிவரும் வரிகள் காட்டுகின்றன.
“கோடையில் ஓர் நாள் மழை வரக்கூடும் கோயில் சிலைக்கும் உயிர் வரக்கூடும் காலங்களாலே காரியம் பிறக்கும் காரியம் பிறந்தால் காரணம் விளங்கும் என் மனம் என்னவென்று யாருக்குத் தெரியும் கண்ணிலே என்ன உண்டு...
ஆம், கோடையில் மழை வரும் அதிசயம்போல், கோயில் சிலைக்கு உயிர் வரும் அதிசயம்போல், அவள் வாழ்க்கையிலும் நற்காரியம் பிறந்தால் அவள் செயல், சொல் எல்லாவற்றுக்கும் காரணம் விளங்கும் என்று அத்தனை வேதனையிலும் நம்பிக்கையோடு அந்த நங்கை பாடுகிறாள்.
இந்தப் படமும் பாடலும் தனியாகக் குடும்பத்தைத் தாங்கி, ஒரு பெரிய குடும்பத்தைத் தன்னந்தனி ஆளாகச் சுமக்கும் ஒரு பெண்ணின் கதை, பாடல். படத்தின் நாயகிக்கு உயிர்கொடுக்கும் பாடலே கவிஞரின் இந்தப் பாடல்தான்.

