கவிஞர் கண்ணதாசனுக்கு கோபம் வந்தால், தமக்கு ஒருவர் உரிய மரியாதை தரவில்லை என்ற எண்ணம் வந்தால், அவரை தமது பாடல்களாலேயே திட்டித் தீர்த்துவிடுவார்.
அப்படித்தான் படித்தால் மட்டும் போதுமா படத்தில் வந்த ஒரு காட்சியில் அப்பொழுது தான் சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கருதி, அதில் ஒரு பாடலை எழுதினார்.
1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது, கட்சிக்கு தேர்தல் களம் புதிது என்பதால், அதில் இருந்த 100 தொகுதிகளில் அறிஞர் அண்ணா 20 அல்லது 30 தொகுதிகளில் போட்டியிட்டால் போதும் என்று எண்ணினாராாம். ஆனால், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியோ கட்சியை வெற்றி பெறச் செய்ய தம்மால் முடியும் என்று வாதாடி 90 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த அறிவுறுத்தினார். அவர்கள் வெற்றி பெறக் கடுமையாக உழைத்தாராம். அண்ணாவும் அதை ஏற்று 40 வேட்பாளர்களுக்கு மேல் வெற்றி பெற்றால் கருணாநிதிக்கு மோதிரம் வாங்கி அணிவிப்பதாக வாக்குறுதி அளித்தார். கருணாநிதி எதிர்பார்த்தது போலவே திமுக வேட்பாளர்கள் 45 பேர் வெற்றி பெற, மோதிரம் வாங்கி அண்ணா கலைஞருக்கு அணிவித்தார். இது கவிஞர் கண்ணதாசனுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது.
கவிஞர் தானும் கட்சிக்காக உழைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட நிலையில் கருணாநிதிக்கு மட்டும் அறிஞர் அண்ணா மோதிரம் அணிவித்து தன்னை மறந்தது கவிஞருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதை அண்ணாவிடமே கவிஞர் கண்ணதாசன் கேட்டதாகவும் அதற்கு அறிஞர் அண்ணா, அதற்கென்ன நீயும் ஒரு மோதிரம் வாங்கித் தா உனக்கு நான் அணிவிக்கிறேன் என்றாராம். பதிலுக்கு கவிஞர், அப்படித்தான் கருணாநிதிக்கு அணிவித்தீர்களாக்கும் என்று தமது மன வருத்ததைத் தெரிவிக்க அதிலிருந்து அவருக்கு அண்ணா மீதும் திமுக மீதும் இருந்த பிடிப்பு போய்விட்டதாக கவிஞர் கூறியுள்ளார்.
திமுகவிலிருந்து விலகுவதற்கு வேறு பல காரணங்கள் இருந்ததாகக் கூறும் கவிஞர், உணர்வுபூர்வமாக இதுதான் தம்மை முதன் முதலில் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
படித்தால் மட்டும் போதுமா படத்தில் படிக்காத முரடனாக வரும் சிவாஜி அவர்களுக்கு சாவித்திரியை பெண் பார்க்கச் செல்லும் பாலாஜி, சாவித்திரியை விரும்ப சிவாஜிக்கு எதிராக மொட்டைக் கடிதம் எழுதி சாவித்திரியுடனான திருமணத்தை தடுக்கிறார். சிவாஜி படித்த பெண்ணான ராஜசுலோசனாவை மணமுடிக்கிறார். ராஜசுலோசனா சிவாஜி மீது வெறுப்பைக் கொட்டுகிறார்.
சாவித்திரியை தம்மால் மணமுடிக்க முடியாமல் போனதற்கு அண்ணன் பாலாஜிதான் காரணம் என சிவாஜிக்கு தெரியவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்தம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழியம்மா
அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்துவிட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
அறிஞர் அண்ணாவின்மேல் தான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்றும் அதில் தான் எப்படி ஏமாற்றம் அடைந்தார் என்பதையும் பாடல் வழியாக கவிஞர் விளக்குகிறார். அண்ணாவின்பால் தான் அளவு கடந்த நம்பிக்கை, பாசம் வைத்திருந்த நிலையில் அவரோ தமது அரசியல் வாழ்வை பற்றி மட்டுமே கவலைப்பட்டார் என்பது தன்னை வாட்டி வதைத்தாக கவிஞர் பாடல் மூலம் சொல்லாமல் சொல்கிறார். “அவனை நினைத்தே நான் இருந்தேன் அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் இன்னும் அவனை மறக்கவில்லை அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை.”

