தெலுங்குத் திரையுலகில் நடிகை பானுமதி ஒரு சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். தெலுங்கு மட்டுமல்ல அவர் தமிழ் திரையுலகிலும் அழியாப் புகழுடன் திகழ்ந்தவர். நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கிய அவர் யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடியவர்.
அன்னை படத்தில் கவிஞர் கண்ணதாசனின் ‘பூவாகிக் காயாகி கனிந்த மரம் ஒன்று, பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று’ என்ற பாடல் அவர் குரலில் இழைந்தோடும். அதற்கேற்றவாறு அவர் முக பாவமும் மனதைக் கவரும்.
குழந்தை இல்லாத தனக்கு சகோதரியின் குழந்தையை வளர்த்து அவரை விட்டுக்கொடுக்க முடியாமல் பாச மழை பொழியும் வளர்ப்புத் தாயாக அந்தப் படத்தில் அவர் வருகிறார்.
ஆனால், இதே பானுமதி ஒரு சமயம் கவிஞர் கண்ணதாசனின் பாட்டைப் பாட மாட்டேன் என்று கூறி வெளியேறிய காலமும் உண்டு. 1952ஆம் ஆண்டில் ஜூபிட்டர் நிறுவனத்தார் தயாரித்த ராணி படத்தில் பானுமதி பாடுவதுபோல் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதினார். அவர் எழுதிய பாடலைப் பார்த்த பானுமதி, இது என்ன பாடல், என்ன மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டது, யார் இதை எழுதியது, என்னால் இந்தப் பாடலைப் பாட முடியாது என்று கோபத்தில் சென்றுவிட்டார். பின்னர் படத்தின் இசையமைப்பாளர் சி ஆர் சுப்பராமன் தனக்குப் பிடித்த, தான் பெருமதிப்பு வைத்திருந்த, கவிஞர் உடுமலை நாராயணகவியைப் பாடல் எழுதச் சொல்லி அதைப் படத்தில் சேர்த்தார்.
பின்னர் 1957ஆம் ஆண்டு கவிஞரின் தமையனார் ஏ எல் சீனிவாசன் தயாரித்த அம்பிகாபதி படத்தில் பானுமதி இளவரசியாய் நடிக்க அவர் மீது காதல் கொள்ளும் கம்பன் மகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம் சிவாஜி நடித்தார். அதில்தான் கவிஞர் கண்ணதாசன் தனது பாடல் வரிகள் மூலம் பானுமதியின் வாயை அடைத்தார். அந்தப் பாடல் வரிகள் கலப்படமில்லாத தமிழில் உருவாகி பானுமதியின் பெயரையும் கொண்டிருக்கும். கம்பன் மகன் அம்பிகாபதி தனது காதலி அமராவதியை நினைத்து எழுதியதாக அந்தப் பாடல் அமைந்திருக்கும். அதை அமராவதி பாட அதற்கேற்றாற்போல் நடிகை ராஜசுலோசனா நடனம் ஆடும் காட்சி இடம்பெற்றது.
அந்தப் பாடல், ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே, காவியமோ ஓவியமோ கன்னி இளம் மானே....வண்ண முக வெண்ணிலவே கன்னி இளம் மானே, வண்டு வந்தது எப்படியோ கன்னி இளம் மானே..’ என்று இருக்கும். பின்னர், ‘கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளம் மானே, காளையரைக் கட்டுதற்கோ கன்னி இளம் மானே,பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளம் மானே, பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளம் மானே....,பானுமதி மாறிவரும் வானகத்தின் மீனே, பார்க்க உன்னைத் தேடுதடி கன்னி இளம் மானே’, என்று பாடல் முற்றுப்பெறும்.
இந்தப் பாடலைக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார் என்று கேள்விப்பட்டதுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார் பானுமதி. கவிஞரை அவர் முன் கூட்டிவந்ததும் இருவருக்கும் பழைய சம்பவம் மனத்திரையில் ஓடியது. ஒருவழியாக நிலைமையைச் சமாளித்த பானுமதி கவிஞரை வாயாரப் புகழ்ந்தார். இனி தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கவிஞர்தான் பாடல் எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாட்டின் கடைசி வரியில் பானுமதி என்ற வார்த்தை என்னைக் குறிப்பிட்டுதானே எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்க, கவிஞரும் சமாளித்துக்கொண்டு அப்படி இல்லை, பானு என்றால் சூரியன், வானத்தில் சூரியனும் சந்திரனும் மாறி மாறி வரும். அவை உன்னைப் பார்க்க துடித்துக் காத்திருப்பதுபோல் அம்பிகாபதி கூறுவதாக எழுதியுள்ளேன் என்று கூறினார். அன்றிலிருந்து நடிகை பானுமதி கவிஞரின் பரம ரசிகராகி விட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஜி ராமநாதனின் இசையில் அந்தப் பாடல் இன்றைக்கும் தெவிட்டாத தேன் அமுது.