தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவியரசர் கண்ணதாசனின் கவிச்சுவை: ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’

3 mins read
9a39b97a-f098-48ee-97bc-3c7cdf4ddd0c
‘ஆலயமணி’ படத்தில் சிவாஜி, சரோஜா தேவி நடித்தனர். அப்படத்தில் வரும் பாடல்கள் இன்றும் பலரின் மனதில் ஒலிக்கின்றன. - படம்: இணையம்
multi-img1 of 2

அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை இவற்றில் எல்லாம் கவியரசர் கண்ணதாசன் ஏகப்பட்ட இன்னல்களைச் சந்தித்தவர்.

ஆனால், என்ன சிரமம் வந்தாலும் அவருடைய பாடல் வரிகளில் நாம் தொய்வு காண முடியாது.

பார்க்கப்போனால் அவர் சிரமப்பட்ட காலங்களில்தான் அவருடைய பாடல் வரிகளில் ஒருவித எழுச்சி, ஈர்ப்புத்தன்மை அதிகமாகவே இருக்கும்.

பி எஸ் வீரப்பா என்றொரு வில்லன் நடிகர், தயாரிப்பாளர் இருந்தார்.

இக்கால சினிமா ரசிகர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், திரைப்படங்களில் அவரைப் போல் ஒரு வில்லன் நடிகரைப் பார்க்க முடியாது.

கட்டான உடல்வாகு, கணீர் குரல், உருட்டும் விழிகள் என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர்.

அந்தக் கால ரசிகர்களுக்கு மகாதேவி படத்தில் அவருடைய அட்டகாச வசனமான, “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்ற கவிஞரின் வரிகளை மறந்திருக்க மாட்டார்கள்.

ஆம், அந்தப் படத்தின் திரைக்கதை, வசனம் எழுதியதும் கவியரசர் கண்ணதாசன்தான்.

சரி, அது இருக்கட்டும்! பி எஸ் வீரப்பா 1962ஆம் ஆண்டு தயாரித்த படம் ஆலயமணி.

இதில் கவிஞரின் பாடல்கள், ‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, ‘சின்ன சின்னக் கண்ணனுக்கு என்ன வேண்டும்,’ கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா,’ ‘பொன்னை விரும்பும் பூமியிலே,’ சட்டி சுட்டதடா கை விட்டதடா,’ ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ என அனைத்துமே மணிமணியானவை.

படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ஒரே ஒரு பாட்டு மட்டுமே கவியரசர் எழுதித் தரவேண்டிய நிலை இருந்தது.

காத்துக் காத்து கிடந்த தயாரிப்பாளர் பி எஸ் வீரப்பா, கவிஞரைச் சந்திக்க நேராக அவர் இல்லத்துக்கே சென்று பாடல் குறித்து கேட்டாராம்.

எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இந்தப் பாடலை மட்டும் நான் சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்று விட்டுவிட முடியுமா என கவிஞரைப் பார்த்துக் கேட்டாராம்.

கவிஞர் அப்பொழுது அரசியல் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.

பி எஸ் வீரப்பா சொன்னதைக் கேட்ட கவிஞர், அன்றிரவு பாடலை எழுதித் தருவதாக வாக்களித்தாராம்.

ஆனால், அன்றைய பொழுது முழுவதும் தயாரிப்பாளர் வீரப்பா சொன்னது கவியரசரின் மனதை வாட்டி வதைத்ததாம்.

அதைத் தொடர்ந்து பி எஸ் வீரப்பா சொன்ன வார்த்தைகளை வைத்தே பாடலை எழுதினார் கவியரசர்.

படத்தின் நாயகன் சிவாஜி தான் காதலிக்கும் பெண் தனது நண்பனின் காதலி என்று தெரிந்து அவனைக் கொல்ல முயற்சி செய்கிறான்.

பின்னர் அதை நினைத்து மனம் வருந்தி தனது உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி அந்த முயற்சியில் இறங்குகிறான்.

காப்பாற்றப்பட்ட அவன் மனம் திருந்தி செய்ததை எண்ணி எண்ணி மனம் வாடுகிறான்.

அதில் பிறந்த அந்தப் பாடல் வரிகள் இதோ:

“ சட்டி சுட்டதடா கை விட்டதா

புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா”

அடிப்படையில் நல்லவனாக வாழ்பவன் மனமும் சில சமயங்களில் கெட்ட எண்ணங்களுக்கு ஆட்பட்டு தகாத செயல்களில் இறங்கிவிடுகிறது.

பின்னர் தெளியும் அந்த மனம் அதற்காக வாடி வருந்துகிறது.

இதைத்தான் கவியரசர் அடுத்த சில வரிகளில் அழகாகக் கூறுகிறார்.

“பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா

அமைதி தெய்வம் முழு மனதில் கோவில் கொண்டதடா

ஆரவாரப் பேய்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டதடா

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா

தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா

மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா”

இனி அடுத்த வரிகள்தான் நம் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது.

படத்தின் நாயகன் எவ்வளவு மனம் வருந்தினான், அதிலிருந்து மீண்டு அவன் மனம் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறது என்பதை அடுத்த சில வரிகள் விளக்குகின்றன.

“எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா

நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா

பிறந்தபோது இருந்த உள்ளம் இன்று வந்ததடா

இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா”

ஒருவன் பிறக்கும்போது அவன் மனத்தில் சூது, வாது, கள்ளம், கபடம் ஏதும் இருப்பதில்லை.

அவை யாவும் பின்னர்தான் அவன் மனதில் ஒட்டிக்கொள்கின்றன.

அதுபோல் இறந்தபின் அவனுக்கு முழு அமைதி, ஓய்வு கிடைத்துவிடுகிறது.

இதைத்தான் கவியரசர் நமக்கு தமக்கே உரிய பாணியில் உணர்த்துகிறார்.

குறிப்புச் சொற்கள்