தமிழில் உருவாகி வரும் ‘அறிவு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கயல் ஆனந்தி. ‘உறியடி’ விஜயகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இது.
தமிழ், தெலுங்குத் திரையுலகில் எதார்த்தமான நடிப்பால் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஆனந்தி, ‘அறிவு’ படம் குறித்து அளித்த பேட்டியில், தனது எதிர்காலத் திரையுலகப் பயணம் குறித்தும் பேசியுள்ளார்.
மலை சார்ந்த பகுதியைப் பின்னணியைக் கொண்ட இத்திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மூணாறில் நடைபெற்றுள்ளது.
இயற்கை சூழ்ந்த அழகான இடம் என்றாலும், கைப்பேசி ‘சிக்னல்’கூட கிடைக்காதாம்.
“அப்படிப்பட்ட சூழலில் 30 நாள்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. இது ஒரு புதுமையான அனுபவம். படத்தின் இயக்குநர் சத்யசிவா, ஒளிப்பதிவாளர் ‘தில்’ ராஜு ஆகியோருடன் பணியாற்றியது மிகச்சிறந்த கற்றல் அனுபவம் என்றும் கூறலாம்.
“நாயகன் விஜயகுமார் ஓர் இயக்குநர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்கும்போது பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது,” என்று கூறியுள்ளார் ஆனந்தி.
நடிப்பைக் கடந்து, சினிமாவின் மற்ற பிரிவுகளிலுள்ள நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஒரு முழுமையான காதல் அல்லது நகைச்சுவைத் திரைப்படத்தை எழுதி இயக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ பாணியில், சண்டைக்காட்சிகள் இல்லாத ஓர் அழகான காதல் கதையை உருவாக்க வேண்டும் என்பதே ஆனந்தியின் ஆசையாம்.
“தற்போது தெலுங்கில் ஆந்திராவின் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி ‘கரிவிடி லட்சுமி’யின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து முடித்துள்ளேன்.
“இளமை முதல் முதுமை வரையிலான ஒரு முழு வாழ்க்கையைத் திரையில் காட்டுவது ஒரு நடிகையாக மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது,” என்று நேர்காணலில் கூறியுள்ளார் ஆனந்தி.
மேலும், ஓடிடி தளங்களின் வளர்ச்சி, பான்-இந்தியா படங்களின் வருகை ஆகியவை திறமையான கலைஞர்களின் படைப்புகள் உலகளவில் மக்களைச் சென்றடைய ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் பாராட்டியுள்ள அவர், தமிழில் நடித்த ‘மங்கை’ திரைப்படம் இன்னும் வெளியாகாதது சற்று வருத்தமளித்தாலும் ‘அறிவு’ படத்தின் தனித்துவமான களம் தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

