தமிழ்ப் படங்களில் இப்போது அதிகம் இடம்பெறாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ், இந்திப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக தனது கணவருடன் மும்பையில் முகாமிட்டுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே, வெறும் வாய்வார்த்தைகளால் மட்டும் வாய்ப்பு கேட்டால் சரிப்பட்டு வராது என்று யாரோ ஆலோசனை சொல்லப்போக, உடனடியாக ஒரு சிறப்பு ‘போட்டோ ஷூட்’டுக்கு ஏற்பாடு செய்துள்ளாராம்.
இந்தியில் ஏற்கெனவே ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி, இப்போது ரன்பீர் கபூருடன் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
“இந்தியில் யாருக்கு எப்போது வாய்ப்பு வரும் என்று தெரியாது. ஆனால், நம்பிக்கை இழக்காமல் காத்திருப்பது முக்கியம்,” என்று இயக்குநர் அட்லீ கூறியதை மறக்காமல் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் கீர்த்தி.
வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையாதது ஏமாற்றம் அளித்தாலும், கீர்த்தி மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அவரது புதுக்கணவர் பக்கபலமாக உள்ளார். அதனால் ஏமாற்றத்துக்கு இடையே உற்சாகம் இழக்காமல் கீர்த்தி வலம் வருகிறார்.
இதற்கிடையே, ‘பாலகம்’ புகழ் வேணு யெல்டாண்டி இயக்கவிருக்கும் ‘எல்லம்மா’ என்ற படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் கீர்த்தி. இதில் அவரும் நிதினும் நடிக்க உள்ளனர். ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் தயாராகிறது இப்படம்.
முன்னதாக இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நானியும், நடிகை சாய்பல்லவியும் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவருமே தேடிவந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டனர்.