‘அசுரன்’, ‘விடுதலை-2’ என தமிழ் ரசிகர்கள் அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்ததன் மூலம், கோடம்பாக்கத்தில் முக்கியமான பிரமுகர்களைத் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கென் கருணாஸ்.
நடிகர் கருணாசின் மகனான இவரை, பல்வேறு இயக்குநர்களும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தபோதே ‘ரெட்டச்சுழி’ படத்தில் நடித்துவிட்டார் கென் கருணாஸ். இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் நடித்த அந்தப் படம்தான் அவரது அறிமுகப் படமாக அமைந்தது.
பள்ளி நாள்களில் கலை நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வாராம். நன்றாக நடனம் ஆடக்கூடியவர் என்பதால் பள்ளி விழாக்களில் இவரது நடனம் கட்டாயம் இடம்பெற்று விடுமாம்.
நண்பர்கள் அளித்த ஊக்கம் காரணமாக நடிப்பு, பல குரல்களில் பேசுவது (மிமிக்ரி) என மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கிறார்.
“எந்தப் பயிற்சியும் இல்லாமல் நடிப்பது, ஆடுவது, பாடுவது, டிரம்ஸ் வாசிப்பது என எல்லாமே எனக்கு இயல்பாக வந்தது. அப்பா நடித்த படங்களில் எனக்கும் சிறு வேடங்கள் அமைந்தன.
“ஒருமுறை என் பள்ளி விழாவுக்கு வந்தபோது இயக்குநர் வெற்றிமாறன் என நடனத்தைப் பார்த்துப் பாராட்டினார். மேலும் ‘நவரசா’ நடிப்பு போட்டியில் ஒரே வசனத்தைப் பல்வேறு உணர்வுகளுடன் பேசி நடித்ததும் அவருக்குப் பிடித்திருந்தது.
“அதுதான் ‘அசுரன்’ பட வாய்ப்பை எனக்கு பெற்றுத்தந்தது,” என்று அண்மைய பேட்டி ஒன்றில் கென் கருணாஸ் கூறியுள்ளார்.
‘அசுரன்’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கப்போவது இவருக்கு முதலில் தெரியாதாம். படப்பிடிப்புக்குச் சென்ற பின்னர்தான் இயக்குநர் வெற்றிமாறன் விவரம் கூறியிருக்கிறார்.
“அடுத்து ‘விடுதலை-2’ படத்திலும் வாய்ப்பு கொடுத்தார் வெற்றிமாறன். பத்து நிமிடம்தான் திரையில் வருவேன். எனினும் படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் எனது கதாபாத்திரம் பல நாள்களுக்கு நிலைத்திருக்கும்.
“‘விடுதலை’ படத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது சேற்றிலும் சகதியிலும் புரள வேண்டியிருந்தது. ஒரு நாள் எலும்பு முறிவு ஏற்பட்டு மூச்சு விடவே சிரமப்பட்டேன். ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறியபோதும், ஒரு வாரத்திலேயே மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன்.
“படம் பார்த்த பலரும் கருப்பன் கதாபாத்திரத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாகப் பாராட்டுகிறார்கள். விஜய் சேதுபதி, சூரி அண்ணா ஆகியோரும் வாழ்த்தினார்கள். இதனால் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.
“நான் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக அவர் கூறியபோது பெருமையாக இருந்தது. இனி எந்தக் கதாபாத்திரத்திலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்றார் கென் கருணாஸ்.