உடல் எடைக் குறைப்பில் தாம் ஆர்வம் காட்டியபோது, தம்மை சரியான திசையில் வழிநடத்தியது நடிகை வித்யா பாலன்தான் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜோதிகா.
சூர்யா, ஜோதிகா தம்பதியர்க்கு உடற்பயிற்சியில் உள்ள ஆர்வம் உலகறிந்தது.
அண்மையில், ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் பிறகு அவர் உடல் எடை குறைந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகின.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஒன்பது கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்திருப்பதாகப் பேட்டியில் கூறியுள்ளார் ஜோதிகா.
“கடந்த அக்டோபர் 2024ல் நடிகை வித்யா பாலன் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லாமல் எவ்வாறு உடல் எடையைக் குறைப்பது என்பதைப் பற்றிப் பேசி, அவரின் பயண காணொளியை வெளியிட்டிருந்தார்.
“வித்யா பாலனின் பயணக் கதையால் ஈர்க்கப்பட்டேன். எடை மேலாண்மை எப்போதுமே எனக்கு ஒரு போராட்டம்தான். கடுமையான உடற்பயிற்சியோ, டிரெட்மில்லில் சில மணிநேரம் ஓடுவது மட்டுமல்ல, குடல் ஆரோக்கியம், செரிமானம், சீரான உணவு, முறையான ஓய்வு ஆகியவையும் அவசியம். இது உடல் எடையை மட்டுமல்ல, மனநிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் ஜோதிகா.
உடல் எடையைக் குறைத்த பின்னர் பல ஆண்டுகளாக இருந்ததைவிட இப்போது அதிக உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் உணர்கிறாராம். எனவே, எடைக் குறைப்புப் பயிற்சிதான் எதிர்காலத்திற்கான சாவி என்கிறார்.
“குறிப்பாக பெண்களுக்கு எடைக் குறைப்பு என்பது மிக அவசியம். இதன் மூலம் நம் உள்ளத்தை வளப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைப்பதும் நமது முக்கிய இலக்காக இருக்க வேண்டும்,” என்றும் அறிவுறுத்தி உள்ளார் ஜோதிகா.