இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான கியாரா அத்வானி, நடிகர் யஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியீடு கண்ட ‘டாக்சிக்’ திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்துள்ளார்.
‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது கணவரும் நடிகருமான சித்தார்த் மல்கோத்ராவுடன் கலந்துகொண்டபோது அவர் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
“ஓர் ஆண் பல பெண்களுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், ஒரு பெண் அப்படி நடித்தால் உடனே அவர் திருமணமானவர் என்பதைக் சுட்டிக்காட்டியும் அதற்கு அவர் கணவர் என்ன நினைக்கிறார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
“இது அப்பட்டமான பாலின சார்பும் இரட்டை நிலைப்பாடாகும். ஐஸ்வர்யா ராய் தொடங்கி பல முன்னணி நடிகைகள் வரை பல ஆண்டுகளாக இந்தச் சமூகத் தடைகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர்,” என்று ஆவேசமாகக் கூறினார் கியாரா.
மேலும், தனது கணவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் தங்களுக்குள் இது குறித்துப் பேசியதே இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“’டாக்சிக்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தராதது முதல் நாளில் மிகுந்த வேதனையை அளித்தது. எனினும், வழக்கமான பாணியிலிருந்து விலகி சவாலான கதாபாத்திரத்தில் நான் நடித்ததை பலரும் பாராட்டினர். எனது திரையுலகப் பயணத்தில் இதுவொரு முக்கியமான திருப்புமுனையாக அமையும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் கியாரா.
திரையுலகில் காலங்காலமாக நிலவிவரும் இரட்டை நிலைப்பாடுகளைத் துணிச்சலாகப் பேசிய கியாரா அத்வானியின் இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளன.
