இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தீபாவளியன்று வெடிச் சத்தத்தைக் கேட்க முடியாது. காரணம், முன்னணி நாயகர்கள் நடித்த ஒரு படம்கூட இந்த ஆண்டு தீபாவளிக்குத் திரைகாணவில்லை.
இதனால் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு யோகம் அடித்திருக்கிறது.
நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘கம்பி கட்ன கதை’ மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்கள் என்றால், துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன் காளமாடன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை அடுத்த சில நாள்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இளம் நாயகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரமாட்டார்கள் என்பதுதான் கவலைக்குக் காரணம்.
புதிய நடிகர்களின் படம் என்றால் முன்பதிவு வசூலில் முக்கியப் பங்களிக்கும். ஒரு வாரத்துக்குள் தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இளம் நாயகர்களுக்கு திரைச்சந்தையில் நிலையான இடம் கிடைக்கும் வரை போராட்டம்தான்.