சின்னி ஜெயந்தைப் பாராட்டிய கவுண்டமணி

2 mins read
c3195a04-4e4b-465b-8223-11f07941b009
மூத்த மகன் ஸ்ருதன் திருமண வரவேற்பில், குடும்பத்தாருடன் சின்னி ஜெயந்த். - படம்: ஊடகம்

‘ஒரு நகைச்சுவை நடிகரின் மகனுடைய திருமணம் இதுபோல் விமர்சையாக நடந்ததில்லை. உன் மகன் திருமணத்தைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. உன் சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்,’ என நடிகர் கவுண்டமணி பாராட்டியபோது அவ்வளவு பெருமையாக இருந்தது,” என்கிறார் நடிகர் சின்னி ஜெயந்த்.

இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதையடுத்து மகனைவிட சின்னி ஜெயந்துக்கு அதிகமான பாராட்டுகள் கிடைத்துள்ளன.

தற்போது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் ஸ்ருதன். அண்மையில் அவருக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதற்கு நேரில் வந்த வாழ்த்திய போதுதான் சின்னியைப் பாராட்டியுள்ளார் நடிகர் கவுண்டமணி.

மகனின் திருமணம் குறித்து அண்மைய பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார் சின்னி ஜெயந்த்.

“என் மருமகள் மானஸ்வி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். எம்பிஏ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

“என் மகனிடம் திருமணத்துக்கு முன்பே, ‘யாரையாவது காதலிக்கிறாயா’ என்று கேட்டபோது, ‘என் பெயருக்குப் பின்னால் உள்ள ‘ஐஏஎஸ்’ என்பதை மட்டும்தான் காதலிக்கிறேன்’ என்றார். அதன் பிறகே அவருக்காக வரன் தேடினோம்.

“மகனைப் போலவே தங்கமான குணம் கொண்ட மருமகளும் கிடைத்திருக்கிறார். எங்களுக்கு இரண்டுமே மகன்கள்தான். பெண் குழந்தை இல்லை. மானஸ்வி எங்கள் வீட்டுப் பெண் பிள்ளை,” என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்ருதன் திருமணத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்தியுள்ளார். அவர் தன் நீண்டநாள் நண்பர் என்றும் ’ஒரே ரத்தம்’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்ததாகவும் நினைவு கூறுகிறார் சின்னி.

“முதல்வர் மு.க.ஸ்டாலினும் இவற்றை நினைவு கூர்ந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இளையராஜா அண்ணனும் திருமணத்துக்கு வந்தது மனநிறைவு அளித்தது.

“என் முதல் படமான ‘கை கொடுக்கும் கை’ படத்துக்கு அவர்தான் இசை. அமெரிக்காவில் இருந்ததால் ஏ.ஆர்.ரஹ்மான் திருமணத்துக்கு வர முடியவில்லை,” என்கிறார் சின்னி.

இவரது இரண்டாவது மகன் சித்தார்த் புகழ்பெற்ற மும்பை செயின்ட் ஜேவியர் கல்லூரியில் படித்துள்ளார். தற்போது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் எம்பிஏ பட்ட மேற்படிப்பு படிக்க உள்ளாராம்.

“முன்பெல்லாம் எங்கேனும் வெளியில் சென்றால், நேரில் சந்திப்பவர்கள் ‘அடுத்து எந்த படத்தில் நடிப்பீர்கள்’ என்று கேட்பார்கள். ஆனால் இப்போது உங்கள் மகன், மக்களோடு மக்களாக இருக்கிறார். மிக அருமையாக சேவையாற்றுகிறார் என்று எல்லோரும் பாராட்டும்போது மனம் குளிர்ந்து போகிறது,” என்று பொறுப்பான தந்தையாக நெகிழ்ந்து போகிறார் சின்னி ஜெயந்த்.

குறிப்புச் சொற்கள்