கடைக்கோடி உழைப்பாளிகளின் குரலாக ‘தீபாவளி போனஸ்’ ஒலிக்கும்: இயக்குநர் உறுதி

2 mins read
ec8c9ad8-224e-4d61-bf51-f140795f4d6d
‘தீபாவளி போனஸ்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

‘தீபாவளி போனஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் நடித்து வருகிறார் விக்ராந்த்.

ரித்விகா நாயகியாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெயபால் இயக்குகிறார். இவர் பல குறும்படங்களை இயக்கியவர். எட்டு ஆண்டுகளாக விளம்பரத்துறையில் பணியாற்றி வருகிறார்.

உலக அளவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனத்துக்கான விளம்பரப் படங்களை உருவாக்கியுள்ள இவரது இயக்கத்தில், உலக மாணவர்கள் ‘கீதம்’ என்ற தலைப்பில் 78 நாடுகளில் யுனஸ்கோ அமைப்பால் ஒளிபரப்பப்படும் பாடல் ஒன்றும் உருவாகியுள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் நான்கு காணொளிப் பாடல்களையும் இயக்கியுள்ளார் ஜெயபால்.

“என்னுடைய சிறு வயதில் தீபாவளி எப்படி இருந்ததோ, அதை மையமாக வைத்துத்தான் இந்தப்படத்தை உருவாக்கி உள்ளேன். தினக்கூலியில் தொடங்கி, லட்சங்களில் சம்பளம் வாங்குவோர் வரை சாதி, மதம் பார்க்காமல் காத்திருப்பது தீபாவளி போனசுக்குத்தான்.

“மதங்களைக் கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக இது உள்ளது. தீபாவளி கொண்டாடும் மக்கள் மட்டுமல்ல, கொண்டாடாத மக்களும் போனஸ் வரும் என்று ஆண்டுதோறும் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள்.

“உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுப்பது இந்த போனஸ்தான். கடைக்கோடி உழைப்பாளிகளின் குரலாக இந்தப்படம் ஒலிக்கும்,” என்கிறார் ஜெயபால்.

விக்ராந்த், ரித்விகா ஆகிய இருவரும் கதைக்குப் பொருத்தமான நடிப்பை வழங்கியிருப்பதாக பாராட்டும் இயக்குநர், மற்ற முக்கியமான கதாபாத்திரங்களில் புது முகங்களைத்தான் நடிக்க வைத்துள்ளாராம்.

“மதுரைதான் இந்தப் படத்தின் கதைக்களம். தீபாவளிக் காலங்களில் கிழக்கு மாசி வீதி உள்பட நான்கு வீதிகளிலும் ஏராளமான கடைகள் எப்போதும் கூட்டம், அவ்வப்போது மழை, வியாபாரம் எனப் பரபரப்பாக இருக்கும்.

“மதுரையைப் பொறுத்தவரை தீபாவளிக் கால மழை என்பது மற்ற ஊர்களைப் போல் அல்லாமல் 5 அல்லது 10 நிமிடங்களுக்கு வெறும் தூறலாகத்தான் இருக்கும். இந்தக் காட்சிக்காக 200 கடைகளுடன் கூடிய பிரம்மாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தினோம்.

“விக்ராந்த், ரித்விகா இருவருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். திரைக்கதையை முன்பே கேட்டு வாங்கிய இருவரும், உரிய பயிற்சிகளை மேற்கொண்டனர்.

“மதுரை தமிழில் பேசி நடிக்க நிறைய பயிற்சி தேவைப்பட்டதுடன் பல்வேறு விவரங்களைச் சொந்த முயற்சியில் தேடிப்பிடித்தனர். இப்படி இந்தப் படத்துக்காக அனைவரும் முடிந்தவரை உழைத்துள்ளோம்.

“நிச்சயமாக அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் யதார்த்த படைப்பாக இது அமையும். ஊதியம், போனஸ் ஆகியவை உழைக்கும் மக்களின் வீடுகளில் எவ்வளவு முக்கியமானதாக உள்ளன என்பதை இந்தப்படம் ஆழமாக அலசும்,” என்கிறார் இயக்குநர் ஜெயபால்.

குறிப்புச் சொற்கள்