‘டிராகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, பிரதீப் ரங்கநாதன் ‘லைக்’, ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரு படங்களுமே தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இம்முறை ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்கள் எதுவும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’ படம் மட்டுமே தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், “எதிர்வரும் தீபாவளிக்கு ‘எல்ஐகே’ அல்லது ‘டியூட்’ ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே வெளியாகும். நாம் ஒன்றாக தீபாவளியைக் கொண்டாடுவோம்,” என்றார்.
தன் நடிப்பில் உருவாகியுள்ள இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி மோதப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திய போதிலும், இந்தத் தீபாவளிக்கு எந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை பிரதீப் கூறவில்லை.
‘எல்ஐகே’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார்.
அதேபோல், ‘எல்ஐகே’ படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் ‘டியூட்’ படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.