தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்க்கை சூட்சுமத்தைப் புரிந்து கொண்டேன்: தன்ஷிகா

3 mins read
78133b7d-f89f-4e17-8f04-ddebbc3c462f
சாய் தன்ஷிகா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

திரையுலகில் கால்பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், 2022ஆம் ஆண்டுதான் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார் சாய் தன்ஷிகா.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நடித்துள்ள இரண்டு தெலுங்குப் படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

“நான் நடித்த ‘தக்‌ஷினா’ தெலுங்குப் படத்தை ஓஷோ துளசிராம் இயக்கினார். நான் தமிழில் நடித்த ‘கபாலி’ படத்தில் ஏற்றிருந்த யோகி கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. அந்த கதாபாத்திரத்தின் தோற்றம், அமைப்பை சற்றே மெருகேற்றி ‘தக்‌ஷினா’ படத்தில் நடிக்க வைத்தார்.

“இது இரண்டு மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அழகான கதை. என்னைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறேன். ஒரு நடிகையாக அது என் கடமை என்றும் நினைக்கிறேன். இதனால் சில பட வாய்ப்புகளை இழக்க முடியாமல் போனாலும் நான் பெரிதாகப் பாதிகப்பட்டதில்லை.

“வெறும் சண்டைக்காட்சிகளில் நடிக்கும் அதிரடி நாயகியாக மட்டும் பெயர் எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு நடனம் பிடிக்கும். எனது இன்னொரு பக்கம் மிக மென்மையானது என்பதற்கு எனது ரசனைகளே நல்ல ஆதாரம். அந்த அடிப்படையில்தான் இதுநாள் வரை எனக்குரிய பட வாய்ப்புகளைத் தேர்வு செய்து வருகிறேன். அதில் ‘தக்‌ஷினா’ படமும் ஒன்று என்கிறார்,” சாய் தன்ஷிகா.

நாள்தோறும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இயல்பாகவே தம்மிடம் அதிகமாக உள்ளது என்று குறிப்பிடுபவர், திரைத்துறை உள்பட படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து துறைகளிலும் செயல்பட இத்தகைய ஆர்வம் அதிகம் என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு குறித்து தாம் பல்வேறு தகவல்களைக் கேள்விப்பட்டு வருவதாகக் கூறும் இவர், திரையுலகம் உள்பட எந்தத் துறையாக இருந்தாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மிக கவனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

“ஒருவரது முகத்துக்குப் பதிலாக மற்றொருவரின் முகத்தைப் பொருத்தி தயாரிக்கப்படும் காணொளிகள் மிக ஆபத்தான முயற்சி. செயற்கை நுண்ணறிவு மூலம் இவ்வாறு செய்வதாக அறிந்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

“சமூக ஊடகங்கள் அறிமுகமானபோது அவை நம்மை சீரழித்துவிடும் என்று பலரும் நினைத்தோம். அதன் பிறகு இவ்வாறு யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினோம்.

“தொழில்நுட்பங்களை நமது வாழ்வில் எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அனைத்தும் அமைகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, தொழில்நுட்பங்களை புறக்கணிப்பதைக் காட்டிலும் கவனமாக பயன் படுத்துவதே முக்கியம். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தற்போது அழிவை நோக்கி நம்மைக் கொண்டு செல்வதாக கருதினாலும், இந்த நிலைப்பாடு பின்னர் மாறக்கூடும்,” என்கிறார் சாய் தன்ஷிகா.

வெற்றி, தோல்விகள் என்பன நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தோல்விகளைச் சந்திக்கும்போது மனம் சற்றே காயப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

“சில சமயங்களில் சிலவற்றை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நான் நடித்த சில படங்களின் வெளியீடு தாமதமாகும்போது கவலையாக உள்ளது. அந்தப் படத்துக்காக நாம் கடுமையாக உழைத்திருப்போம். மற்றொரு முக்கியமான வாய்ப்பு நமக்காக காத்திருக்கும். முந்தைய படம் சிக்கலின்றி வெளியான பிறகுதான், அடுத்த படத்தில் நாம் நிம்மதியாக கவனம் செலுத்த முடியும்.

“எனினும் தோல்விகளை நான் வெறுத்ததில்லை. தோல்விகள்தான் நம்மை அவமானங்களைச் சந்திக்க வைக்கும் நல்ல பாடங்களையும் புகட்டும். அந்தப் பாடங்கள்தான் நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்,” என்று தத்துவார்த்தமாகவும் பேசுகிறார் சாய் தன்ஷிகா.

வெற்றி, தோல்விகளைக் கடந்து, தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதே தமது விருப்பம் என்றும் நல்ல திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே தமது வேலை என்றும் சொல்லும் சாய் தன்ஷிகா, வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் பொறுப்பை ரசிகர்களிடம் விட்டுவிட்டதாக கூறுகிறார்.

“பலர் பலவிதமாகப் பேசுவார்கள். ஆனால் நாம் எதையும் கண்டுகொள்ளாமல் நமது பாதையில் செல்வதுதான் முக்கியம். எத்தகைய உணர்வை எதிர்கொண்டாலும், அதை முழுமையாக உணரப் பாருங்கள். பிறகு அந்த உணர்வுகளை அவற்றின் போக்கில் செல்ல அனுமதியுங்கள். இதுதான் நான் புரிந்துகொண்ட வாழ்க்கை சூட்சுமம் என்கிறார்,” சாய் தன்ஷிகா.

குறிப்புச் சொற்கள்