நடிகை ஸ்ரீதேவியின் வாரிசான ஜான்வி கபூர், ‘தேவாரா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார்.
இந்தப்படம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் வெளயீடு காண்கிறது.
இதில் ஜூனியர் என்.டி.ஆர். நாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ். சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்த படம் இது.
அண்மையில் இப்படக் குழுவினர் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, தாம் சென்னையில்தான் குச்சுப்புடி நடனம் கற்றுக்கொண்டதாகக் கூறினார் ஜூனியர் என்.டி.ஆர்.
‘தேவாரா’ தமக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்றும் அண்மைய விகடன் ஊடகப்பேட்டியிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் பல்வேறு மொழிகளால் பிரிந்திருக்கிறோம். ஆனால் திரையுலகத்தால் அல்ல. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று நம்மைப் பிரிக்க இயலாது என வெற்றிமாறன் கூறியுள்ளார்,” எனக் குறிப்பிட்டுள்ளார் ஜூனியர் என்டிஆர்.
தமிழில் வெற்றிமாறன்தான் இவருக்குப் பிடித்த இயக்குநராம்.
அவரது இயக்கத்தில் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க விரும்புவதாகவும் பின்னர் அப்படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்ய ஆசைப்படுவதாகவும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ‘தேவரா’ தெலுங்குப்படம் தென்னிந்திய மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற தமது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
தனது தாயார் ஸ்ரீதேவியிடம் ரசிகர்கள் கொண்டிருந்த அன்புதான், இன்று தானும் தனது குடும்பமும் நன்றாக இருக்க காரணம் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
ஜான்வி தமிழில் பேசியது அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அனைவரையும் சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
“சென்னை எனக்கு மிகவும் முக்கியமான இடம். அம்மாவுடன் நான் இருந்த சிறப்பான தருணங்கள் அனைத்துமே சென்னையில் நிகழ்ந்தவைதான்.
“என் குடும்பத்துக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு எப்போதுமே நான் கடமைப்பட்டுள்ளேன். அம்மாவிடம் காட்டிய அதே அன்பை எனக்கும் அளிப்பீர்கள் என நம்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்,” என்றார் ஜான்வி கபூர்.
‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய ‘கொரட்டலா’ சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘தேவாரா’.
“நசுக்கப்பட்ட, இப்போதும் நசுக்கப்படும் மக்களுக்காக துணிச்சலுடன் குரல்கொடுக்கும் நாயகனின் கதைதான் ‘தேவாரா’. அதே சமயம் மக்களுக்கு அளவுக்கு அதிகமான துணிச்சல் ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வேலையையும் ‘தேவாரா’ செய்கிறான்.
“முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டுள்ள கதை இது. எனவே நிச்சயமாக மக்களைச் சென்றடையும்,” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் சிவா.
“நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே விரும்புவேன். கதை பிடித்திருந்தால் உடனே தயாராகிவிடுவேன்,” என்று ஜூனியர் என்டிஆர் ஊடகப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இக்கதையை கூறினாராம் சிவா. கதை மிக அருமையாக இருந்ததால் உடனே நடிக்க சம்மதித்துள்ளார்.
“கதை, திரைக்கதைக்காக சுமார் 10 மாதங்கள் வேலை பார்த்தார் இயக்குநர் சிவா. அதன்பிறகு நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களுடன் கூட்டணி அமைத்தோம். நல்ல நடிகர்களையும் ஒப்பந்தம் செய்தோம்.
“நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே விரும்புவேன். கதை பிடித்திருந்தால் உடனே தயாராகி விடுவேன். இந்தப் படத்திலும் அதுதான் நடந்தது,” என்று ஊடகப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.
ஸ்ரீதேவி மகளை தென்னிந்திய மொழியில் நடிக்க வைக்க பலத்த போட்டி நிலவியது. சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகிய யாரேனும் ஒரு முன்னணி கதாநாயகருடன் அவர் தமிழ்ப் படத்தில்தான் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்தது தமிழ் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

