இளம் தலைமுறையின் காதலைத் திரையில் பிரதிபலிக்கும் படம் ‘வித் லவ்’: மதன்

2 mins read
3456d466-dac8-4010-a374-9ad3d6c4c9d0
‘வித் லவ்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்
multi-img1 of 2

முழுநீள காதல் படமாக உருவாகியுள்ளது ‘வித் லவ்’.

வித்தியாசமான திரைக்கதையும் நகைச்சுவையும் காதலின் சுவையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் மதன்.

“எல்லாருக்குமே முதல் காதலை மறக்கமுடியாது. இவ்வாறு பலரது முதல் காதலை நினைவூட்டும் விதமாக இந்தப் படம் இருக்கும்,” என்று இப்போதே உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் மதன்.

“திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரது முகத்திலும் சிறு புன்னகையைக் காண முடியும்.

“இன்றைய இளம் தலைமுறையினரின் காதலைத் திரைக்கதை அப்படியே பிரதிபலிக்கும். படத்தின் கதை நாயகன் பக்கத்து வீட்டுப் பையனைப் போல் இருப்பார்.

“நான் அன்றாட வாழ்க்கையில் நூறு பையன்களைப் பார்க்கிறேன் எனில், அதில் எழுபது பேர் இந்தக் கதையின் நாயகனைப் போல்தான் இருப்பர். அப்படிப்பட்ட ஒருவனது கதைதான் இந்தப்படம்,” என்கிறார் இயக்குநர் மதன்.

காதல் தோல்விக்காக உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் துவண்டுவிடாமல் அடுத்தடுத்த காதலை மனிதர்கள் தேடிப்போக வேண்டும் என்ற கருத்தும் இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காதல் இல்லை என்றால் வாழ்க்கை கிடையாது என்பதல்ல. காதலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை சுவாரசியமாகக் காட்சிப்படுத்தி உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

‘டூரிஸ்டு ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார்.

அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்தான் மதன். படத்தின் கடைசி 40 நிமிடங்களில் அபிஷனின் நடிப்பைக் கண்டு தாம் வியந்துபோனதாகப் பாராட்டுகிறார் மதன்.

இப்படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைகாண உள்ளது.

குறிப்புச் சொற்கள்