ரசிகர்கள் காட்டும் அன்பு அலாதியானது: சூர்யா நெகிழ்ச்சி

1 mins read
f4060bc0-2458-4cdc-828b-4c6b9d890ec7
‘ரெட்ரோ’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

கடந்த 1ஆம் தேதி வெளியான ‘ரெட்ரோ’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்திலும் வேறுபாட்டைக் காட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைத்துறையில் சில அம்சங்களை மாற்றி அமைப்பவர்கள் தேவைப்படுவார்கள்.

“எவரேனும் ஒருவர் வந்து வித்தியாசத்தைக் காட்சிப்படுத்திவிடுவார்கள். அப்படித்தான் கார்த்திக் சுப்புராஜ் மாற்றியமைத்திருக்கிறார்.

“அவருடைய கதாபாத்திரம், அவர் எழுதிய ஒரு வகையிலான பாணியில்தான் நடந்துகொள்ளும். அவர் எப்படியான படங்கள் செய்தாலும், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை உங்களால் கணிக்கவே முடியாது.

“குறிப்பிட்ட சில காட்சிகள் முடிவு செய்யப்பட்டதும் படப்பிடிப்புக்குத் தயாராவோம். அந்தச் சமயத்தில் ஒரு புதிய கோணத்தின் மூலம் ஆச்சரியத்தைக் கொடுத்து நடிகர்களால் இதைச் செய்ய முடியுமா எனச் சவால்விடுவார். அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் சூர்யா.

தாம் மும்பைக்கு அதிகம் வந்ததில்லை என்று குறிப்பிட்ட அவர், மும்பை ரசிகர்கள் காட்டும் அன்பு அலாதியானது என்றார்.

“நீங்கள் எல்லாம் யார் சாமி? எனக்காக இப்படியான அன்பைக் கொடுக்கிறீர்களே... நான் என்னுடைய பள்ளி, கல்லூரி நாள்களில் பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டேன். சென்னை கல்லூரியில் வணிகத்துறையில் பட்டப்படிப்பை முடித்தேன்.

“அங்கிருந்துதான், அதாவது கையில் எதுவுமே இல்லாத நிலையில், என் வாழ்வை நகர்த்தத் தொடங்கினேன்,” என்றார் சூர்யா.

குறிப்புச் சொற்கள்