‘குறளிசைக்காவியம்’ என்ற தலைப்பில் 1,330 திருக்குறளுக்கும் மெட்டமைத்து, அதன் பொருளோடு 1,330 பாடல்களாக உருவாக்கியுள்ளார் இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்.
அண்மையில், இந்த இசைத்தொகுப்பின் 33 நிமிடங்கள் மட்டும் சென்னையில் திரையிடப்பட்டது. திரைத்துறையைச் சார்ந்த பல முக்கியமான பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு லிடியனையும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினியையும் வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய லிடியன் நாதஸ்வரம், தமிழ் மொழியின் தலைசிறந்த நூலான திருக்குறளை வைத்து இசைத்தொகுப்பை உருவாக்கியதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகக் குறிப்பிட்டார்.
பல தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு பொருள் எழுதியிருந்தாலும், பெரும்பான்மையான மக்களிடம் திருக்குறளின் முழுமையான பொருள் இன்னும் சென்று சேரவில்லை என்றும் அவர் கூறினார்.
“எனவே, திருக்குறளைச் சரியான முறையில் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. திருக்குறளுக்கு சக்திவாசன் என்பவர் நாங்கள் எதிர்பார்த்த உரையை எழுதிக்கொடுத்திருக்கிறார்,” என்று கைத்தட்டல்களுக்கு மத்தியில் தெரிவித்தார் லிடியன்.
இந்தத் திட்டத்தை 2014ஆம் ஆண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டனராம். அப்போது லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினிக்கு 12 வயது. லிடியனுக்கு 9 வயது.
“அறம், பொருள், இன்பம் என முப்பாலின் கருத்துகளையும் தெளிவாகப் புரிந்து அதை முதிர்ச்சியுடன் அணுகவேண்டும் என்பதற்காக அப்போது இந்தப் பணியைப் பாதியில் நிறுத்திவிட்டோம்.
“அதற்குள் என்னுடைய சகோதரி 400 குறள்களுக்கு மெட்டமைத்து, பாடல்களைத் தயார் செய்துவிட்டார். பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“இடைப்பட்ட காலத்தில் நானும் என் சகோதரியும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். கிட்டத்தட்ட 35 புதிய இசைக் கருவிகளை நான் இசைக்கக் கற்றுக்கொண்டேன்.
“நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும் திருக்குறளை வெவ்வேறு இசை வகைகளில் கொடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, உழைத்திருக்கிறோம்.
“உலகத்தின் மிகப்பெரிய இசைத் தொகுப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்,” என்றார் லிடியன்.
அமிர்தவர்ஷினி பேசியபோது, தமது பங்களிப்பு மிகச் சிறியதுதான் என்றும் லிடியன் பெரும் உழைப்பைக் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
லிடியன் வீட்டில் இருந்தால் அவரைச் சுற்றி எப்போதுமே 50 இசைக் கருவிகளாவது இருக்கும் என்றும் கூறினார். இந்த இசைத்தொகுப்பில் ஆயிரம் பின்னணிப் பாடகர்களைப் பயன்படுத்தியுள்ளார் லிடியன்.
இவர்கள் இருவரையும் நடிகர் சிவகுமார் பாராட்டி, வாழ்த்திப் பேசினார்.
“தமிழறிஞர்கள் மு.வ., கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா எனப் பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
“லிடியனின் இத்தொகுப்பிற்காக திருக்குறள் உரை எழுதியிருக்கும் சக்திவாசனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். இங்கு இருக்கும் 90% பேருக்குத் திருக்குறளின் பொருள் தெரியாது. அதனை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் அவர் உரை எழுதியிருக்கிறார்.
“லிடியன், அமிர்தவர்ஷினி இருவருமே தெய்வப் பிறவிகள். உலகத்திலேயே இவர்கள் மட்டும்தான் 1,330 திருக்குறளையும் வெவ்வேறு பாடகர்களை வைத்துப் பதிவு செய்திருப்பார்கள்.
“13 வயதிலேயே உலகம் முழுக்க கவனம் ஈர்த்து சரித்திரச் சாதனை படைத்த லிடியன், தமிழகத்தில் பிறந்தது அவர் செய்த பாவம். அமெரிக்காவில் லிடியன் பிறந்திருந்தால் கடவுளாக வைத்து கொண்டாடி இருப்பார்கள்.
“ஆனால் தமிழகமோ இன்னும் அவரைக் கொண்டாடாமல் இருக்கிறது. இதைவிடப் பள்ளிக் குழந்தைகளுகுத் திருக்குறளை எளிமையாக விளக்க முடியாது,” என்றார் சிவகுமார்.