தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை

3 mins read
ffdefa1b-4750-4a9e-bc70-9bb00341bf86
கவிஞர் கண்ணதாசன். - படம்: ஊடகம்
multi-img1 of 3

கவியரசர். பெயரைச் சொன்னாலே நம் நினைவுக்கு வருவது கவிஞர் கண்ணதாசன் மட்டும்தான்.

அவருடைய பாடல் வரிகளிலேயே சொல்வதென்றால், “நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்,

அந்த நினைவிலும் அவர் முகம் நிறைந்திருக்கும்...”

ஒருவர் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை வைத்தே அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் காலத்தால் அழியாத பாடல் வரிகளை வரைவார் கவியரசர்.

அவரது பாடல்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்பும், சிரிக்க, சிந்திக்க வைக்கும், தலைவிதியை எண்ணிப் புலம்ப வைக்கும், காதல் அரும்புவோர்க்கு இன்பத்தை வாரி வழங்கும், அதே நேரம் காதல் தோல்வியால் துன்பத்தில் உழல்பவனை ‘நான் அப்போதே சொன்னேனே, உன் அறிவுக்கு எட்டவில்லையா’ என்று அவனை நொந்துகொள்ள வைக்கும்.

அவரது பாடல்களை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஏதாவது ஒரு பாட்டை கேட்கலாம் என்று நினைக்கும்போதே அதற்கு ஈடாக, இல்லை இல்லை, அதற்கும் மேலாக நம்மைக் சுண்டியிழுக்கும் மற்ற பாடல்கள் நினைவில் வந்து விழும்.

கவியரசரின் பாடல்கள் நமது எண்ண அலைகளை மட்டும் கவர்வதில்லை. அவருடைய இனிய தமிழ் சொற்சேர்க்கை திகட்டாத தேன் சுவை.

தாலாட்டுப் பாடல்களை நாம் கேட்டிருப்போம். ஆனால், ஒரு குழந்தையை பாடல் வரிகளிலேயே கொஞ்சுவதைக் கேட்டிருக்கிறீர்களா?

இதோ, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படப் பாடல் வரிகளை கவனியுங்கள்.

“முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ,

கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ”.

இது வெறும் ஆரம்பம்தான், அடுத்து வரும் வரிகளை கேளுங்கள்,

“சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்காரச் சிட்டல்லவோ,

செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ”

வர்த்தைகள் எல்லாம் எவ்வளவு அழகாக ‘ச’ வரிசையில் வருகிறது என்பதை கவனியுங்கள்.

இதைத் தொடர்ந்து அந்தக் குழுந்தையின் கண்ணை வர்ணிப்பதைப் பாருங்கள்.

பெண்களின் கண்களை கெண்டை மீனுக்கு உவமை கூறுவர்.

வேல்விழி என்றும் வர்ணிப்பர்.

ஆனால், ஒரு குழந்தையின் கண்?

இதோ கவியரசர்,

“மாவடு கண்ணல்லவோ,

மைனாவின் மொழியல்லவோ,

பூவின் மணமல்லவோ, பொன்போன்ற முகமல்லவோ,”

ஆம் அந்தப் பெண் குழந்தையின் கண் மாவடுபோல் இருக்கிறதாம்,

அதன் பேச்சு, மைனாவின் மொழியைப் போல் இருக்கிறதாம்.

மைனாப் பறவையின் கீச் குரல் நமக்குப் புரியாது,

ஆனால் அதை ரசித்து இன்புற முடியும்.

எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் தினமும் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து

பறவைகளின் கீச் ஒலியை சில நிமிடங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பாராம்.

இதைத்தான் கவிஞர் அழகுறக் கூறுகிறார்.

அத்துடன், அந்தக் குழந்தைக்கு பூவை ஒத்த முகமாம், பொன் போன்ற உடலாம்.

இன்னும் கேளுங்கள்.

அந்தக் குழந்தை எப்படிப்பட்ட குழந்தை என்பதை அடுத்து வரும் வரிகளில் கவிஞரே கூறுகிறார்.

“வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ,

பேசாத தெய்வத்தையும் பேசவைக்கும் தாயல்லவோ,

தாழங் குடையல்லவோ, தள்ளாடும் நடையல்லவோ,

மாலைப் பொழுதல்லவோ, வண்டாடும் செண்டல்லவோ.”

அந்தக் குழந்தை சேய் மட்டுமல்ல, தாயும்கூட,

அதன் தள்ளாடும் நடையும் ஓர் அழகுதான்.

மாலைப் பொழுதும் வண்டுகள் தேடிப்போகும் செண்டும் அந்தக் குழந்தைதான்.

கவியரசர் இதுபோல் எண்ணற்ற வரிகளை தந்து நம்மை பரவசப்படுத்தி உள்ளார்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் காண்போம்.

குறிப்புச் சொற்கள்