சென்ற வாரம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் பாடல் வரிகளாலேயே ஒரு குழந்தையைக் கொஞ்சுவதை ரசித்தோம்.
அதே படத்தில் கவியரசர் ஒரு பாரம்பரியக் குடும்ப மாதின் ஆழமான மனநிலையை தனது பாடல் வாயிலாக நம்மை எப்படி நெகிழ வைக்கிறார் என்று பார்ப்போம்.
1962ஆம் ஆண்டு வெளிவந்த ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் அந்தக் காலகட்டத்தில் குறுகிய நாள்களில் எடுத்த படம்.
படத்தின் பாடல் வரிகளை கவியரசர் எப்படி வடித்தார் என்பதற்கு சுவையான தகவல் ஒன்று உள்ளது.
குறுகிய காலப் படம் என்பதால் தயாரிப்பாளர் ஸ்ரீதர், சையமைப்பாளர் விஸ்வநாதனைக் கூப்பிட்டு அவரது இசைக்குழுவுடன் கவியரசரையும், சென்னை பரபரப்பைத் தாண்டி, பெங்களூருக்குச் சென்று ஐந்து நாள்களுக்குள் பாடல்கள் எழுதி இசையமைத்து வருமாறு கூறினாராம்.
அதன்படியே, விஸ்வநாதன் இசைக்குழுவுடன் கவியரசரையும் அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றார்.
விஸ்வநாதன் பாடல்களுக்கான கதையமைப்பையும் கவியரசரிடம் பெங்களூர் போகும் வழியிலேயே விவரமாகக் கூறினாராம். ஆனால், தூக்கப் பிரியரும் சுகவாசியுமான கவியரசர், பெங்களூர் சென்று முதல் மூன்று நாள்களை தூங்கியே கழித்துவிட்டாராம்.
கோபங் கொண்ட விஸ்வநாதன் (அவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்பதையும் தாண்டி இருவருமே தொழில்பக்தி உள்ளவர்கள்) கண்ணதாசனைப் பார்த்து, அவர் பாட்டெழுதித் தருவார் என்ற நம்பிக்கை போய்விட்டதாகக் கூறியதுடன் வேறு ஒருவரைப் பார்த்து பாட்டெழுதிக் கொண்டுபோகப் போவதாகவும் கூறினாராம்.
தொடர்புடைய செய்திகள்
இதைக் கேட்டு அதிர்ந்த கவியரசர், ‘சொன்னது நீதானா’ என்ற கேள்வியை வீசினாராம். அதை செவிமடுத்த மெல்லிசை மன்னரும், ‘ஆமாய்யா, நான்தான் சொன்னேன்’ எனப் பதில் கூறினாராம்.
கண்ணதாசனோ அவர் பதிலுக்குக் கூட காத்திராமல் அது பாடல் வரி என்று கூறி கடகடவென முழுப் பாடல் வரிகளையும் எழுதிக்கொள்ளச் சொன்னார். அப்படி வந்ததுதான் இந்தப் பாடல்.
இது சாதாரணப் பாடலன்று. படத்தின் நாயகன் மனைவிக்கு முன்னாள் காதலன் இருக்கிறான் என்பதை அறிந்து அவளது நலனை எண்ணி, தான் இறந்தபின் அவள் தன் காதலனையே மணக்க வேண்டும் என்கிறான். தான் இறந்தபின்னரும் அவளுக்கு இன்னல் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவன் கூறியது மனைவியைக் கண்கலங்க வைத்தது.
அவள் சாதாரணப் பெண் அல்ல. பாரம்பரிய பண்புநெறிகளைப் போற்றி வளர்ந்து, வாழும் பெண்.
இதோ அந்தப் பாடல் வரிகள்:
“சொன்னது நீதானா, சொல் சொல் என்னுயிரே, இன்று சொன்னது நீதானா, சொல் சொல் என்னுயிரே, சம்மதம் தானா, ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே”
தான் இன்னொருவருடன் வாழ முடியாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள் அந்தப் பெண். என்னை நீ நினைத்துப் பார்க்கவில்லையே என்று கணவனிடம் முறையிடுகிறாள் அவள்.
“இன்னொரு கைகளிலே நான் யார் நானா, என்னை மறந்தாயா, ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே”
அவள் எப்படிப்பட்ட பெண் என்பதை அடுத்த சில வரிகள் நம் கண்முன்ளே கொண்டு வருகிறது.
“மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீதானே இன்று சொன்னது நீதானா...”
என்று கண்ணீர்விடாத குறையாகப் பாடுகிறாள்.
தான் இறந்த பின்னர் அவள் தனது காதலனைக் கைப்பிடிக்க வேண்டும் என்று கணவன் கூறுகிறான் அல்லவா?
அதற்கும் அவள் தான் வளர்ந்த விதத்திலேயே அவனுக்கு பதில் தருகிறாள்.
“தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ஒரு கொடியில் ஒருமுறைதான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒருமுறைதான் வளரும் உறவல்லவா”
என்று பாடுகிறாள்.
அந்தப் பாடல் காட்சி, சுசீலாவின் குரல், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை எல்லாம் சேர்ந்து பாடலை எங்கோ கொண்டுபோய் விட்டுவிட்டது என்றாலும் என் மனத்தில் என்றென்றும் ரீங்காரமிடுகிறது கவியரசரின் பாடல் வரிகள்தான்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்களும் மறக்க முடியாத இந்தப் பாடலைக் கேட்டு இன்புறலாம்.