கவியரசர் கண்ணதாசனை ஒருமுறை அவரது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்படி இவ்வளவு அற்புதமான கவிதை வருகிறது என்று கேட்டாராம்.
அதற்கு கவிஞர் தன்னடக்கத்துடன், “நான் எங்கே கவிதை புனைந்தேன், வாழ்க்கை அனுபவங்களைத்தானே எழுதினேன்,” எனப் பதிலளித்தாராம்.
ஆம், கவிஞரின் தனிப்பட்ட வாழ்விலும் அவரது அரசியல் வாழ்விலும் அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம் ஏராளம். அதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கணக்கிலடங்கா.
அதன் பயனாக சோகத்திலும் அவரால் நம்பிக்கையுடன் இருக்க முடிந்தது, மற்றவர்களையும் தன் கவிதை வரிகளால் தூக்கி நிறுத்த முடிந்தது.
அதற்கு இதோ ஒரு சான்று. எம்ஜிஆர் படங்களுக்குப் பாடல்கள் எழுதி பிரபலமானவர் கவிஞர் வாலி.
கவியரசரைப் போலவே அவரும் நமக்காகவே அடுக்கு மொழியால் அறிவுரை கூறுவதுபோல் இருக்கும்.
அப்படிப்பட்ட கவிஞருக்கு ஒருமுறை எம்ஜிஆருடன் ஏற்பட்ட சிறு மனவருத்தத்தால் எம்ஜிஆர் நடிக்கும் படங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைக்காமல் சிரமப்பட்டார்.
வேறொன்றுமில்லை, கவிஞர் வாலியின் திருமணத்தை எம்ஜிஆர் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்திருக்க, அவரோ நடிகை ரமண திலகத்தை எளிமையான முறையில் காதும் காதும் வைத்தாற்போல் திருமணம் செய்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் சில ஆண்டுகள் சிரமப்பட்டார்.
சரி, இந்த சினிமாவுக்கு பாடல் எழுதும் தொழில் நமக்கு சரிப்பட்டு வராது என முடிவுகட்டி கிளம்பினாராம் வாலி.
அப்பொழுது ஒலித்த கவியரசரின் பாடல் ஒன்றுதான் அவருடைய எதிர்காலத்தை அடியோடு புரட்டிப் போட்டதாகக் கூறப்படுகிறது.
அது என்ன பாடல் எனத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அதுதான் சுமைதாங்கி படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா...’ என்ற பாடல்.
அந்தப் பாடல் வரிகளை நன்றாகக் கேட்டால் அது எவரையும் நம்பிக்கையுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் எழுந்து செயல்படத் தூண்டும்.
இதோ அந்த வரிகள்:
“மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரமிருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்”
இதில் வரும் அடுத்த சில வரிகள்தான் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையை, அவருக்கு மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியினை ஏற்றி வைத்தது.
“ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு “
இந்தக் கடைசி இரண்டு வரிகள் கவிஞர் வாலியை தேற்றிவிட, அவரும் திரும்பவும் பாட்டெழுதும் தொழிலுக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, எம்ஜிஆரும் பழையபடி அவரைத் தான் நடித்த ‘தாழம்பூ’ படத்துக்கு பாட்டெழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், அந்தப் படத்தில், அவர் எழுதிய பாட்டிலேயே எம்ஜிஆருக்கு உறைக்கும்படி நச்சென தனது எண்ண ஓட்டத்தை கவிஞர் வாலி தனது பாடல் வரிகள் மூலம் உணர்த்தினார். அந்தப் பாடல் வரிகள் இது:
“எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்
“கால்கள் இருக்க, கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்.....”
என எம்ஜிஆரையே லைட்டாக கிண்டல் செய்வதுபோல் பாட்டு வரிகளை அமைத்தார் வாலி.
எது எப்படியோ, கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி அவரைத் திரும்பவும் திரைப்பாடல் எழுதத் தூண்டியது ‘சுமைதாங்கி’ படத்தில் வந்த கவியரசரின் பாட்டு வரிகள்தான்.

