‘நான் ஒரு முட்டாளுங்க... ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...’

3 mins read
104d997c-575d-4c2f-8b15-4d8e3c4fa11e
கவிஞர் கண்ணதாசன். - படம்: ஊடகம்
multi-img1 of 3

கவியரசர் கண்ணதாசன் தாலாட்டு, பக்தி, தத்துவ, காதல், சோகம், எழுச்சி என பல வகையான பாடல்களை வரைந்துள்ளார்.

ஆனால், பலருக்கும் தெரியாத ஒன்று உண்டென்றால், கவியரசரால் கொச்சை தமிழில் சென்னைவாசிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய மொழியிலும் பாடல் எழுதத் தெரியும் என்பது.

அதற்கும் திரைப்பாடல்கள் எழுதத் தொடங்கிய சில காலத்திலேயே கவியரசர் சக்கைப்போடு போட்டார்.

ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களின் ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் வேறொருவருடன் கூட்டாகத் தயாரித்த படம்தான் ‘சகோதரி’ என்ற குடும்பப் பாங்கான படம்.

இதில் ஒரு கதாநாயகனாக வரும் பாலாஜி, மனைவிக்கு துரோகம் செய்யும் விதமாக குடியும் கும்மாளமுமாக திசைமாறிப் போகிறார். போதாக்குறைக்கு பால் கொண்டு வரும் பெண்ணுடன் பழக ஆரம்பிக்கிறார். பின்னர் திருந்தி, எல்லாம் சரியாகி படம் முடிவடைகிறது. 

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த மெய்யப்ப செட்டியாருக்கு படத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதுபோல் தோன்றியது.

இப்படியே படம் வெளிவந்தால் அது நல்ல வசூலைப் பெறாது என்றும் தோன்றியது. நன்கு யோசித்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

படத்தின் இயக்குநரைக் கூப்பிட்டு படத்தில் சந்திரபாபுவின் ஒரு நகைச்சுவைப் பாடல் காட்சியை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கேற்றவாறு ‘சகோதரி’ படத்தில் ஓர் அருமையான பாடல் காட்சி தயாரானது.

படத்தின் முக்கிய காட்சியே அந்தப் பாடல் காட்சிதான். படம் பெரும் வெற்றி பெற்றதும் அந்தப் பாடல் காட்சியால்தான்.

அந்தப் பாடல் காட்சி இதுதான்:

பட நாயகன் பாலாஜி பால்காரி சகிதமாக பலருடன் சேர்ந்து கும்மாளம் போடும் போது அதிரடியாக சந்திரபாபு நுழைந்து பாட்டுப் பாடி அவர்கள் அனைவரையும் கிண்டல் செய்து வெளியேற்றுவார்.

அந்தப் பாடலை, முழுக்க முழுக்க சென்னைத் தமிழில் அற்புதமாக எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். இதோ:

“நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க நான் ஒரு முட்டாளுங்க,

ஏற்கெனவே சொன்னவங்க ஏமாந்து போனாங்க, 

எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க,

நான் ஒரு முட்டாளுங்க”

இன்னும் சென்னை தமிழ் வரவில்லையே என யோசிக்கிறீர்களா, இதோ வந்துவிட்டது:

“கண் நிறைஞ்ச பெண்டாட்டியே கய்தை சொன்னாங்க

முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க

பேசாதே இன்னாங்க, புரட்டி புரட்டி எடுத்தாங்க,

பீஸ் பீஸா கீச்சாங்க, பேஜாரா பூட்டுதுங்க

நான் ஒரு முட்டாளுங்க”

இப்படி மனைவியைக் கொடுமைப்படுத்துவதை சென்னைத் தமிழில் கூறிய கவியரசர், அடுத்து வேலைக்காரியாக வந்த பால்காரி  எப்படி வீட்டு எசமானிபோல் நடக்க ஆரம்பித்து விட்டார் என்பதைக் கூறுகிறார்

“கால் பார்த்து நடந்தது கண்ஜாடை காட்டுது,

பால் கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா மாறுது

மேநாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது

ஏன்னு கேட்டாக்கா எட்டி எட்டி உதைக்கிது, நான் ஒரு முட்டாளுங்க”

இனி அடுத்து வரும் வரிகளும் பால்காரியாக வந்தவர் எப்படி பாரம்பரிய பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களைப் புறந்தள்ளி மாறினார் என்பதையும் கவியரசர் தமக்கே உரிய நடையில் கிண்டல் செய்கிறார்.

“நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க

நாலுங் கெட்ட கூட்டமொண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

ஆனவரை சொன்னேங்க அடிக்கத்தானே வந்தாங்க 

அத்தனையும் சொன்ன என்ன இளிச்சவாயன்னுனாங்க நான் ஒரு முட்டாளுங்க”

இந்தப் பாடல் வரிகள், சந்திரபாபு பாடி, நடித்து அசத்தியது. எல்லாமாகச் சேர்ந்து படத்துக்குப் புத்துயிர் ஊட்டியது. படமும் மெய்யப்ப செட்டியார் எண்ணியதுபோல் வெற்றிபெற்றது.

இந்தப் படக் காட்சியையும் பாடலையும் யூடியூப்பில் கண்டுகளித்தால் தெரியும் அது எந்த அளவுக்குத் திரையில் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று.

குறிப்புச் சொற்கள்