“ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா, அந்த பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்தது யாரு
அடி ஆத்தாடி அதப் பார்த்த பேரு கூறு நீ..”
மேலே வருவது ‘முதல் வசந்தம்’ படத்தில் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் வரிகள்.
அந்தப் பாடல் காட்சி, இசைஞானி அவர்களின் இசை, பாடல் வரிகள் எல்லாம் சேர்ந்து ஒருவர் மனத்தில் என்றும் நீங்கா இடம்பிடித்துவிடும்.
கவிஞர் முத்துலிங்கம் கூறுவது பலர் உண்மை என்றே வாதிடுவர்.
ஆனால், கவியரசர் கண்ணதாசன் சற்றே வித்தியாசமானவர். சற்றே என்ன, நிறையவே வித்தியாசமானவர்.
ஒரு பெண் மனது எப்படி இருக்கும், அதில் என்னென்ன ஆசைகள் அலைமோதும், அதற்காக அவள் எப்படியெல்லாம் ஏங்குவாள் என்பதைப் பல பாடல்களில் வெளிக்காட்டி இருக்கிறார் கவியரசர்.
அப்படிப்பட்ட ஒரு பாடலைத்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
1961ஆம் ஆண்டு சென்னைக்கு நான் 10 வயது பாலகனாகச் சென்றபோது ஒரு திரையரங்கில் நடிகர் திலகம் நடித்த பாலும் பழமும் படம் ஓடிக்கொண்டிருந்தது.
அதற்கு நேர் எதிரே மற்றொரு திரையரங்கில் ஜெமினி கணேசன் நடித்த ‘பாக்கியலட்சுமி’ படம் ஓடிக்கொண்டிருந்தது.
‘பாலும் பழமும்’ படத்தை பார்க்கச் சென்ற ‘பாக்கியலட்சுமி’ படத்தைப் பார்க்க எண்ணவில்லை.
ஆனால், அதில் வரும் இரண்டு பாடல்களை கேட்டு ரசித்த பின்தான் அந்தப் படத்தை ஏன் பார்க்காமல் வந்தோம் என்று இன்றுவரை வருந்துவதுண்டு.
பத்து வயதில் எனக்கு கவியரசரின் பாடல்களை புரிந்துகொண்டு ரசிக்கும் பக்குவம் இல்லை.
‘பாக்கியலட்சுமி’ படத்தில் இரண்டு பாடல்கள் மேலே நான் கூறியபடி ஒரு பெண் மனது பற்றி அவ்வளவு அருமையாக வடித்திருப்பார் கவியரசர்.
முதல் பாட்டில் கைம்பெண்ணாக வரும் சௌகார் ஜானகி படத்தில் தனது கனவில் வரும் காதலனைப் பற்றி தோழி ஈ வி சரோஜாவுக்கு தெரிவிப்பார்.
அந்தப் பாடல் வரிகள் இதோ:
“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை, காரணம் ஏன் தோழி
இன்பம் சில நாள், துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி...”
எந்தப் பெண்ணும் தனது சுக துக்கங்களில் பங்குபெற்று தனக்கு ஆறுதல் கூறுபவனைத்தான் துணைவனாக வேண்டுவாள்.
அந்த உள்ளக் கிடக்கையைத்தான் கவியரசர் தமது தொடக்க வரிகளால், தான் கண்ட கனவை, இல்லை இல்லை அந்தப் பெண்ணின் ஆழ் மனதில் இருக்கும் ஆசையை நமக்கு உணர்த்துகிறார்.
படத்தில் தோழி ஈ வி சரோஜா வீணை மீட்ட, அருகில் ஈ வி சரோஜாவின் கணவர் ஜெமினியும் பாடலை ரசிக்க, சௌகார் ஜானகி தன் கனவில் காதலனாக, கணவனாக தோன்றிய ஒருவரை நேரில் காணவில்லையே என்பதைத்தான்,
“இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி” என்று ஏக்கத்துடன் பாடுகிறார்.
அது மட்டுமல்ல, கனவில் கண்ட கணவரைப் பற்றி தோழி ஈ வி சரோஜாவிடம் முறையிடுகிறார்.
அடுத்து,
மணமுடித்தவர்போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் கும்குமம் தந்தார், மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ, வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி...
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறைந்துவிட்டார் தோழி,
பறந்து விட்டார் தோழி,” என்ற வரிகளைக் கவனியுங்கள்.
எத்தனை பேர் வாழ்க்கையில் இப்படி நடந்திருக்கும், காதலில் மட்டுமல்ல, ஒருவருக்கு நாம் உதவி செய்யும்போது,
‘இதை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்’
‘என்னை நன்றாகப் பாருங்கள், நான் ஏமாற்றுவேனா’ என்று கூறிவிட்டு பின்னர் அது பற்றிய சிந்தனை சற்றும் இல்லாமல் இருப்பவர் எத்தனை பேர்.
இன்னொன்றையும் கவனியுங்கள், கவியரசரின் வரிகளில், “..ஓர் வடிவு கண்டேன்..” என்று வருகிறது. ஓர் என்ற வார்த்தை பெரும்பாலும் உயிரெழுத்துடன் தொடங்கும் வார்த்தைக்கு முன்னால் வருவது.
ஆனால், கவிதைக்கு (கவிதை மட்டுமல்ல, எது ஒன்றையும் எளிதாக புரிய வைக்க வேண்டுமென்றால் அதற்கு) இலக்கணம் பார்க்க முடியாது என்பார்கள்.
இனி, அடுத்த வரிகளுக்கு வருவோம்.
“கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம் அதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்..”
கனவில் கணவனாக வந்தவன் கனவு கலைந்து மறைந்ததை மட்டுமா கவியரசர் அந்தப் பெண் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
அவருடைய கடைசி இரண்டு வரிகளில் நம்மில் அநேகர் இளமைக் காலத்தை கனவுலகிலேயே கழித்து பின்னர் தெளிவில்லாத, முடிவு தெரியாத எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்கிறோம் என்று எவ்வளவு அழகாகக் கூறுகிறார் கவியரசர்.
அந்தப் பாடல் காட்சி, கவியரசரின் வரிகள், பி சுசிலாவின் இழையும் குரல், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களின் மங்கள வாத்தியங்கள், வீணையுடன் கூடிய இசை அனைத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
இன்னும் கூற வேண்டுமானால், பி சுசிலாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் அவர் பாடிய சிறந்த பாடல்களில் ஒன்று. அது மட்டுமல்ல இந்தப் பாடல் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடலாகவும் அமைந்தது.
இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான “காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே,
“கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே என்ன, ...” என்ற பாடலும் ரசிர்களின் செவிக்கு விருந்தாக அமையும்.
இந்தப் படத்தின் மிகச் சிறப்பான அம்சமே கவியரசரின் இந்த இரண்டு பாடல்களும்தான்.