தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...

4 mins read
கவியரசு கண்ணதாசனின் கவிச்சுவை (9) 
79bf4ebb-80a4-4299-b6e0-37e821218b66
(இடமிருந்து) இயக்குநர் பாலச்சந்தர், அவள் ஒரு தொடர்கதை படத்தில் சுஜாதா, ஸ்ரீபிரியா. - படங்கள்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் புதுமை இயக்குநர் என்று பெயர் பெற்ற கே பாலச்சந்தர் தமதுபடங்களுக்கு பெரும்பாலும் வாலியையே பாடல்களை எழுதச் சொல்லியிருக்கிறார். ஆனால், என்ன நினைத்தாரோ தமது ‘அவர் ஒரு தொடர்கதை’ படத்திற்கு கவியரசு கண்ணதாசனைப் பாடல் எழுத அழைத்தார்.

அந்த வாய்ப்பைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொண்ட கண்ணதாசன் அதில் தத்துவ மழையாகப் பொழிந்துள்ளார்.

அவருடைய சோகத் தத்துவப் பாடல்களில் எப்பொழுதும் இறைவனைத் திட்டி வம்புக்கு இழக்கும் கவியரசு, இந்தப் படத்திலும் அதைத் தப்பாமல் செய்துள்ளார்.

இப்படித்தான் ‘வானம்பாடி’ படத்தில் ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்...’ என்றவர் நீதி படத்தில், ‘..கடவுள் என் வாழ்வில் கடன்காரன்,

கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும், ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீகூட குடிகாரன்’, என்றும், கர்ணன் படத்தில், ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா’ என்றும் பாடல் வரிகளை எழுதினார்.

இந்த வரி வருவதாலேயே முதலில் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அந்தப் பாடலைப் பாட மாட்டேன் என்றாராம்.

அவரைப் பார்த்து கண்ணதாசன் பாடல் வரிகளை நான்தானே எழுதியுள்ளேன், நீங்கள் பாடுவதில் ஒன்றுமில்லை என்று சமாதானம் செய்தாராம்.

இனி ‘அவள் ஒரு தொடர்கதை’ படப் பாடலுக்கு வருவோம்.

படத்தின் நாயகி ஒற்றை ஆளாகக் குடும்பத்தைக் காக்கிறாள், வேலை ஏதும் செய்யாமல் ஊதாரியாகத் திரியும் அண்ணன், அவர் மனைவி, அவர்களின் குழந்தைகள் உட்பட. ஒரு கட்டத்தில் அண்ணனை வீட்டை விட்டு வெளியே போகும்படி படத்தின் நாயகியாக வரும் சுஜாதா கூறுகிறார்.

அப்பொழுது வரும் பாடலில்தான் கவியரசு தனது முழுத் தத்துவ ஞானத்தையும் பொழிந்து தள்ளியுள்ளார்.

இதோ அந்தப் பாடல், “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு,

இந்த ஊரென்ன, சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே,

வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன,

நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா,

இல்லை என் பிள்ளை எனக் கேட்டுப் பிறந்தானா,

தெய்வம் செய்த பாவம் போடி தங்கச்சி,

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி,

ஆதி வீடு அந்தம் காடு,

இதில் நானென்ன அடியே நீயென்ன ஞானப் பெண்ணே,

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன..

கதாநாயகியின் அண்ணன், அவர் விரும்பி இந்த உலகுக்கு வரவில்லை என்றும் அதுபோல்தான் அவரின் பிள்ளைகளும், இவை எல்லாம் தெய்வம் செய்த பாவம் என்கிறார்.

அவர்களைக் கொல்வது பாவம், இருக்கும்வரை சாப்பிட்டுப் போகட்டுமே என்கிறார்.

அது மட்டுமல்ல, கருவறையில் உதித்த நாம் அனைவரும் இறுதி மூச்சுக்குப் பின் சாக்காடு, சுடுகாடிற்குத்தான் போகப் போகிறோம்.

இதில் உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை என்று படத்தின் நாயகியைப் பார்த்து அவள் அண்ணன் பாடுகிறான். 

அடுத்து வரும் பாடல் வரிகள் இன்னும் சிறப்பானவை.

அவர் தங்கை தான் பார்க்கும் வேலைக்காகத் தன்னை அழகுபடுத்திக்கொள்கிறார்.

அதைக் குறிப்பிடும் பாடல் வரிகள்,

“வெறுங் கோவில் இதிலென்ன அபிஷேகம்,

உன் மனமெங்கும் தெருக்கூத்து, பகல் வேஷம்,

கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி,

காட்டுக்கேது தோட்டக்காரன்,

இதுதான் என் கட்சி, கொண்டதென்ன கொடுப்பதென்ன,

இதில் தாயென்ன மணந்த தாரமென்ன ஞானப் பெண்ணே,

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன...

அவள் போடுவது பகல் வேஷமாம்,

கள்ளிச் செடியை யாரும் சொந்தம் கொண்டாட மாட்டார்கள்,

அதற்கு வேலி போட்டு பாதுகாக்கவும் மாட்டார்கள், 

அத்துடன் நீ எதைக் கொண்டு வந்தாய், எதைக் கொடுத்தாய்,

அதில் தாய் என்றும் தாரம் என்றும் பாகுபாடு பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று அவன் கேட்கிறான்.

இதைத் தொடர்ந்து கடைசியாக வரும் சில பாடல் வரிகள் இன்னும் முத்தாய்ப்பு வைத்தது போல் இருக்கும்,

“தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்,

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்,

மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி,

என்னைத் தோண்டி ஞானம் கண்டேன்,

இதுதான் என் கட்சி, உண்மை என்ன பொய்மை என்ன,

இதில் தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே 

வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதையென்ன...”

ஒருவர் கூறும் கருத்துகள் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருந்தால் அதைச் சித்தாந்தம் என்று கூறுவோம்.

அதுவே எளிதில் புரிந்துகொள்ள முடியாத சிந்தை ஓட்டத்தை வேதாந்தம் என்போம்.

இப்படித்தான், “எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா, நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா,..” என்று ஆலயமணி படத்தில் பாடல் வரிகளால் நம்மை அசத்திய கவிஞர், இங்கு தன்னைத் தோண்டி ஞானம் கண்டதாகக் கூறுகிறார்.

அது மட்டுமா, எது உண்மை, எது பொய்மை, தர்மம் என்றால் என்ன, எது அதர்மம் என்பதுகூட காலத்துக்கேற்றவாறு மாறும் என்பதைத்தான் இங்கு கூற வருகிறார்.

கிரேக்க அறிஞர் பிளேட்டோ காலத்தில் கிரீசில் அடிமைகள், அடிமைத்தனம் என்பது சமுதாயத்தின் ஒரு பிரிவினராகவே கருதப்பட்டது. ஆப்ரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்கும்வரை அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர் அடிமைகளாகவே வாழ்ந்தனர், நடத்தப்பட்டனர்.

இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் கவியரசு கண்ணதாசனின் சொல்வளம், அவருடைய சிந்தனைத்திறன் ஆகியவற்றைக் கண்டு வியப்புறுவர் என்பதில் ஐயமில்லை.

இந்தப் பாடலை நான் பலமுறை கேட்டுள்ளேன், எனக்கு சலிப்புத் தட்டவேயில்லை. நீங்களும் கேட்டு இன்புறுங்கள். 

குறிப்புச் சொற்கள்