மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகிறது ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படம்.
இந்தப் படத்தில் மாதவனும் மடோனா செபாஸ்டியனும் இணைந்து நடித்துள்ளனர்.
இதில் யார் அதிர்ஷ்டசாலி என்று கேட்டால் இயக்குநரிடம் இருந்து விரிவான, விரைவான விளக்கம் கிடைக்கிறது.
“இதுதான் கதைக்குப் பொருத்தமான தலைப்பு என உறுதியாக நம்புகிறேன். ஒரு நல்ல கதை என்பது தனக்குத் தேவையான அனைத்தையும் அதுவாகத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அப்படித்தான் கதை முடிவானதும் இந்தத் தலைப்புதான் என் மனதில் தோன்றியது,” என்கிறார் மித்ரன்.
இது வாழ்வின் அர்த்தங்களையும் மதிப்பையும் நமக்கு உணர்த்தும் கதையாம். ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கை மிக அழகானது என்றும் உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி என்பதை ஒவ்வொரு தருணமும் கதைக்கரு உணர வைக்கும் என்றும் கூறுகிறார் மித்ரன் ஜவஹர்.
சாதாரண தொழிலாளியாக நடிக்கிறார் மாதவன். அவர் யார், அவரது வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், அவர் இறுதியில் என்னவாகிறார் என்பதுதான் ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படமாக உருவாகிறது.
சாய் தன்ஷிகா மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ஜெகன், ‘அலைபாயுதே’ ரவிபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுப் படத்தையும் ஸ்காட்லாந்தில்தான் படமாக்கியுள்ளனர்.
“மாதவன் (மேடி) மிகவும் இயல்பானவர். அனைவரையும் சமமாக மதித்து எளிமையாகப் பேசிப் பழகுவார்.
தொடர்புடைய செய்திகள்
“மகேந்திரன், செல்வராகவன், தனுஷ் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். அவர்களிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டது போல் மாதவனிடமும் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது.
“என்னைப் பொறுத்தவரை மாதவன் ஒரு குட்டி கமல் எனலாம். காரணம் கமல்ஹாசனிடம் எப்படி ஒரு படத்தைப் பற்றி சொன்னால் அதுகுறித்து விரிவாகப் பேசுவாரோ, அதேபோல் மாதவனும் பேசுகிறார். இயக்குநராகவும் பாராட்டுகளும் விருதுகளும் பெற்றுள்ள அவர், அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கான எண்ணம் கொண்டுள்ளார்.
“அவற்றுக்கான கதைகளையும் தயாராக வைத்துள்ள அவரது ஆர்வமும் உழைப்பும் பிரம்மிக்க வைக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு எவையெல்லாம் பிடிக்கும் என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்துள்ள அவர், ஒரு புதுப்பட நாயகன்போல் ஈடுபாட்டுடன் உழைப்பது நமக்கும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டிவிடுகிறது,” என்கிறார் மித்ரன் ஜவஹர்.
நாயகிகள் மடோனா, தன்ஷிகா ஆகியோர் குறித்து?
“இருவருமே சரளமாகத் தமிழ் பேசக்கூடிய கதாநாயகிகள். மேலும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கவும் தெரிந்தவர்கள்.
“இப்படத்தில் மாதவன் மனைவியாக நடித்துள்ளார் மடோனா. அதற்குச் சமமான கதாபாத்திரத்தில் தன்ஷிகாவைப் பார்க்க முடியும். ‘யாரடி நீ மோகினி’ படத்துக்குப் பிறகு மீண்டும் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளேன். இந்தக் கதைக்கு அவரது இசை பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. நீண்ட காலத்துக்குப் பிறகு அவருடன் பணியாற்றும் ஆசையும் எனக்கு இருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு மிக நன்றாக இருப்பதாக வியந்து பாராட்டினார் யுவன்.
“ஸ்காட்லாந்தில் சிற்றூர்கள் அதிகம். பொதுவாக பாடல், துரத்தல் காட்சிகளுக்காகத்தான் தமிழ்த் திரையுலகத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவார்கள். ஆனால் இந்தப்படத்தின் கதையே ஸ்காட்லாந்தில்தான் நடக்கிறது.
“ஹாலிவுட் ‘ஹாரிபாட்டர்’ படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்களில்தான் நாங்களும் பல காட்சிகளைப் படமாக்கினோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடத்தியபோது கடும் குளிர் நிலவியது. எனினும், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அர்ப்பணிப்போடு செயல்பட்டனர்,” என்கிறார் இயக்குநர் மித்ரன்.