தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எளிமையான வாழ்க்கையை விவரிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’

3 mins read
b5ef5d73-b18d-44f7-82f6-b4257eee8483
ரோஷினி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சின்னத்திரைத் தொடரான ‘பாரதி கண்ணம்மா’ மூலம் பிரபலமான ரோஷினி, நாயகியாக அறிமுகமாகும் திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’.

இதில் காளி வெங்கட் கதை நாயகனாகவும் சத்யராஜா, ஹரிப்பிரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், கீதா கைலாசம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

கார்த்திகேயன் மணி இயக்கியுள்ளார். சொந்தமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், திரைப்பட இயக்குநராக மாறியது தனி சுவாரசியம்.

“இது ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் படம். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. அகநானூறு, புறநானூறு என ஒவ்வொரு நூலாகப் படிக்கப் படிக்க அந்த இலக்கியங்களுக்கு எப்படியாவது திரை வடிவம் கொடுக்க வேண்டும் என விரும்பினேன்,” என்கிறார் கார்த்திகேயன்.

முதல் முயற்சியாக, புறநானூறு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறும்படத்தை இயக்கினாராம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, மேலும் உற்சாகமாகிவிட்டார்.

“மேலை நாட்டவர்களால் தங்களது புராதன விஷயங்களைத் திரைப்படமாக எடுக்க முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஆவணப்படமாக எடுப்பார்கள். ஏனெனில், அது தங்கள் கலாசாரத்துக்கான முன்னெடுப்பு என்பது அவர்களுக்குத் தெரியும்.

“ஆனால், நம் மக்கள் மத்தியில் இதுபோன்ற முயற்சிகள் குறைவுதான். எனினும் நல்ல, அர்த்தமுள்ள விஷயங்களைச் சொல்லும்போது மக்கள் கொண்டாடுவார்கள் என்பது புரிந்தது. அப்படிச் சொல்லப்படாத விஷயங்களைச் சொல்லவேண்டும் என்பதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம்,” என்கிறார் கார்த்திகேயன்.

எளிய மக்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சி இருப்பதைப் பார்க்க முடியும். ஆனால், வாழ்வியல் சார்ந்த இதுபோன்ற வாழ்க்கை திரைப்படமாக பதிவு செய்யப்படுவதில்லை.

மேலும், இப்படிப்பட்ட கதைகளில் சுவாரசியம் இருக்காது. எனவே, அலுப்பு தரக்கூடிய வாழ்க்கை என்று விமர்சிக்கப்படக்கூடும். இப்படிப்பட்ட எளிய வாழ்க்கையை எவ்வாறு சுவாரசியமான சினிமாவாக உருவாக்க முடியும் என்பதுதான் கார்த்திகேயனுக்கு சவாலாக இருந்ததாம்.

கதைப்படி, சத்யராஜ் கற்பனையும் அறிவியலும் கலந்த கதைகளை எழுதக்கூடிய கதாசிரியர். ஒரு கட்டத்தில் எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான காளி வெங்கட்டின் கதையை எழுதத் தொடங்குகிறார்.

“முன்னேற வாய்ப்பில்லை என்றாலும், பெற்ற பிள்ளைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் காளி வெங்கட்டுக்கு ஒரு கட்டத்தில், பிள்ளைகளுடனேயே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எனினும், அவர் தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது உயர வேண்டும் எனப் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்தப் போராட்டத்தை ரசிக்கும்படிச் சொல்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம்.

“ரோஷினி திறமையான நடிகை. சின்னத்திரையைப் போலவே வெள்ளித்திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

“ஏராளமான படங்களில் நடித்த அனுபவமுள்ள போதும், சத்யராஜ் தனது கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுவது வியப்பளிக்கிறது.

“இந்தக் கதையில் நடிக்க முதலில் முன்னணி கதாநாயகன் ஒருவரைத்தான் அணுகினோம். ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. பிறகுதான் காளி வெங்கட்டைச் சந்தித்தோம். கதையைச் சொல்லும்போதே அவர் தனது கதாபாத்திரத்துடன் தன் தந்தையை ஒப்பிட்டுப் பார்த்து, கதையோட்டத்தைப் புரிந்துகொண்டார்.

“அவர் நடித்த ‘கார்க்கி’ எனக்குப் பிடித்தமான படம். அவரது நடிப்பும் பிரமாதம். இந்தப் படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார்,” என்று பாராட்டுகிறார் கார்த்திகேயன்.

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தில் பாலசாரங்கன் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் வடிவேலு. இதற்கான ஒலிப்பதிவு எட்டு மணிநேரம் நடைபெற்றதாம்.

குறிப்புச் சொற்கள்