இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ‘மகாராஜா’ படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படத்தை சீன மொழியில் மறுபதிப்பு செய்து அலிபாபா குழுமம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியிட்டது. இந்திய அளவில் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் தற்போது சீன ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திரைப்படம் வெளியாகி 3 தினங்களே ஆன நிலையில், இந்தப் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. 3 தினங்களிலேயே 26 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் ‘மகாராஜா’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்த கோலிவுட் படமான சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ‘2 பாயிண்ட் ஓ’ (2.O) வசூல் சாதனையை ‘மகாராஜா’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

