வில்லன் கதாபாத்திரமே இல்லாமல் தமிழில் ஒரு படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் ‘மாமன்’. கதாநாயகனாக நடிப்பவர் சூரி.
இதன் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். ‘விலங்கு’ இணையத்தொடரில் அதிரடியாகத் தெரிய வந்தவர். இவர் இயக்குநர் பாண்டியராஜின் முதன்மைச் சீடர்.
‘மாமன்’ படத்தின் கதைக்கருவை இவரிடம் கூறியதே சூரிதானாம். ஓர் உண்மைச் சம்பவத்தை அவர் விவரிக்க, அதற்கு முழு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“இது சூரி அண்ணன் சொன்ன கதைக் கருதான். உண்மையான சம்பவம்தான். இதில் யாரும் வில்லன்கள் கிடையாது. அவரவர் பக்கம் சென்று அவரவர்களுக்கான நியாயத்தைச் சொல்லியிருக்கோம்.
“எப்போதும் உறவுகள் செய்யும் தவறுகளை நாம் பெரிதுபடுத்த மாட்டோம். அந்தத் தவறுகள் நமக்கு மோசமானதாகத் தெரியாது.
“நிறைய பிரச்சினைகள் நாம் புரிந்துகொள்ளாததால்தான் பெரிதாகின்றன. தவறு செய்யாத மனிதன் இந்த உலகத்தில் கிடையாது இல்லையா?
“அதனால்தான் கிராமத்து மண்ணையும் அங்கு உள்ளவர்களின் மனத்தையும் வைத்து மறக்க முடியாத ஒரு படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறேன்,” என்கிறார் இயக்குநர் பிரசாந்த்.
‘விலங்கு’ இணையத்தொடர் போன்று ரத்தம், அடிதடி இல்லாமல், மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே உணர்வுபூர்வமாக ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்பதற்கு தனது படமும் நல்ல உதாரணமாக இருக்கும் என்கிறார்.
‘மாமன்’ படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு தங்களின் உறவுகள் சித்தப்பா, பெரியப்பா, அக்கா, அங்காளி, பங்காளி, தலைக்கட்டுகள் என அனைவரது பெயர்களும் நினைவுக்கு வரும். அவர்களுடனான அனுபவங்கள் மனதில் நிழலாடும் என்றும் சொல்கிறார் இயக்குநர்.
“இந்தக் கதைக்கு சூரி அண்ணன்தான் சரியாக வருவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
“படத்தின் கதையமைப்பு சேர்ந்து வரும்போதே அதன் போக்கு புரிந்துவிட்டது. நானும் அவரும் சேர்ந்துதான் இப்படி ஒரு கதையைப் படமாக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
“சூரி அண்ணன் சொன்ன கருவுக்குத் திரைக்கதையை எழுதி முடிக்கும்போது கனவாக இருந்தது. திரைப்படமாக்கிப் பார்த்தபோது நிறைவாக இருந்தது.
“திரைக்கதையை எழுதும்போது எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ அப்படியே ‘மாம’னைக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
“இந்தக் கதைக்கு சூரி அண்ணனைத்தான் மனம் வேண்டியது. என்னுடைய குருவான இயக்குநர் பாண்டியராஜ் ‘இது நம்ம ஆளு’ படத்தை எடுக்கும்போதே சூரி அண்ணனைத் தெரியும். எங்கு பார்த்தாலும் நமக்கென சில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவார். “அவசரமாக எங்காவது போகும்போது நாம் குறுக்கிட்டாலும் முகம் மலர நின்று பேசுவார். அதில் அளவு கடந்த அன்பு தெரியும்.
“அவர் ‘விடுதலை’ படத்தில் எவ்வளவு பிரமாதமாக நடித்தார் எனப் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்திலும் அவருக்கான இடம் மிகப் பெரியது. அவரது கதாபாத்திரம் வழியாகத்தான் மொத்தக் கதையும் நகரும்.
“சூரி அண்ணன் மெனக்கெட்டு உழைத்து அடைந்த இடம் இது. ‘கருடன்’ படத்தில் நடித்த பிறகு, ‘ஏழு கடல் ஏழு மலை’ என அவர் நடிக்கும் படங்களின் தன்மை, வகை முழுவதும் மாறிவிட்டது. சிரிக்க வைக்க மட்டுமே யோசித்த அண்ணன், இப்போது நாயகனாக உயர்ந்து பொறுப்பாக நிற்பதே அழகு,” என்கிறார் இயக்குநர் பிரசாந்த்.

