‘ஒரு குப்பைக் கதை’ படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருதைப் பெற்றுள்ளார் மனீஷா யாதவ்.
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்றாலும், இதுவரை பிரம்மாண்ட படம் எதிலும் தம்மால் நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மற்ற நடிகைகளைப் போலவே தானும் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுதான் திரையுலகில் நீடித்து வருவதாக அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் மனீஷா.
அதிலும், சில காலத்துக்கு முன்பு மனீஷா இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாக, அதனை இவரே படிக்க நேர்ந்ததாம்.
“என் குடும்பத்தாரும் நண்பர்களும் பதறிவிட்டனர். தீர விசாரித்த போதுதான் மனீஷா என்ற சின்னத்திரை நடிகை ஒருவர் இறந்துபோனார் என்பதை அறிந்தேன்.
“அதைத் தவறாகப் புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டு குழப்பிவிட்டனர்.
“எனக்குத் தெரிந்த செய்தியாளர்கள் ஒவ்வொருவரையும் நானே தொடர்புகொண்டு இறந்துபோன மனீஷா நானல்ல என்று கூற வேண்டியிருந்தது.
“வீட்டுக்கு வந்த பெரியவர்கள், திருஷ்டி கழிந்ததாக நினைத்துக்கொள் என்று கூறி ஆறுதல்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
“கூடுமானவரை நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடிக்க விரும்பியதால் நல்ல கதைகளுக்காகக் காத்திருந்தேன்.
“அதனால்தான் இடையில் சிலகாலம் ஓர் இடைவெளி ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக அது பெரிய இடைவெளி ஆகிவிட்டது. அதற்கு நான் காரணமல்ல.
“நடிப்புக்காக நான் வாங்கும் முதல் விருது இதுதான். அது மாநில விருதாக அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் இயக்குநர் திரு காளி, தயாரிப்பாளர்களுக்கு நன்றி,” என்று கூறியுள்ள மனீஷா யாதவ், அந்தப் படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சென்னை கூவம் குடிசைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் எளிய மக்களின் கதை இது.
படப்பிடிப்புக்காக 35 நாள்களுக்கு மேலாக குடிசைப் பகுதியில்தான் படப்பிடிப்பு நடந்ததாம்.
“இதற்காக அவர்களில் ஒரு பெண்ணாக நான் மாற வேண்டியிருந்தது. படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு அமைந்தது.
“இதன் மூலம் பூங்கொடி கதாபாத்திரத்தை திரையில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை மனத்துக்குள் கிரகிக்க முடிந்தது. இந்தப் படத்தில் நடித்தபிறகு தூய்மைப் பணியாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“அவர்கள் மீது தனி மரியாதையும் ஏற்பட்டது,” என்று சொல்லும் மனீஷா யாதவ், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்.
‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ பாடலுக்கு இவர் ஆடிய நடனத்துக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
“இதுவும் நடிப்பின் ஒரு பகுதிதான். ஒரு நடிகை என்றால் அனைத்துவிதமான கதாபாத்திரத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.
“பள்ளி, கல்லூரி, கிராமத்துப் பெண்ணாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. அப்படித்தான் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பும் தேடி வந்தது.
“இதுவும் நடிப்பின் ஒரு பகுதி என்பதால் தயக்கமின்றி நடனமாட ஒப்புக்கொண்டேன்.
“அதைப் பார்த்துவிட்டு, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்’ என்று சிலர் கேட்டனர். அதேசமயம் சிறப்பாக நடனமாடியதாக பலர் பாராட்டவும் செய்தனர்,” என்று சொல்லும் மனீஷாவுக்கு, தமிழில் பிடித்த நடிகர் தனுஷ்.
பிடித்த இயக்குநர்கள் பட்டியலில் மணிரத்னம், பாலா, வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
‘காக்கா முட்டை’ படத்தில் நடிக்க இவரைத்தான் இயக்குநர் மணிகண்டன் முதலில் அணுகினாராம்.
“ஆனால், வேறு படங்களில் கவனம் செலுத்தியதால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.
“அதேபோல் ‘அட்டகத்தி’ படத்திலும் நந்திதா கதாபாத்திரத்திலும் நான்தான் நடிப்பதாக இருந்தது,” என்று இப்போது நினைத்து வருத்தப்படுகிறார் மனீஷா.
‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘சண்டி முனி’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

