மலையாள நடிகர் மோகன்லால் தீவிர காற்பந்து ரசிகர். ஓய்வு நேரங்களில் காற்பந்துப் போட்டிகளைத் தவறாமல் பார்ப்பார்.
இந்நிலையில், ரசிகர்கள் அவருக்கு அர்ஜென்டினா காற்பந்து வீரர் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்ஸியைப் பரிசாக அளித்துள்ளனர். அதில், மோகன்லாலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பரிசைக் கண்டதும் துள்ளிக்குதித்து உற்சாகமாய் வலம் வந்தாராம் மோகன்லால். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
“வாழ்க்கையில் சில தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதுவும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான்.
“காற்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி என்னுடைய பெயரை தன் கையால் எழுதிக் கொடுத்துள்ளார். இதனை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.
“இது என் நண்பர்களான ராஜீவ் மாங்கோட்டில், ராஜேஷ் பிலிப் ஆகிய இருவரும் இல்லையெனில் சாத்தியமாகி இருக்காது,” என்று அப்பதிவில் மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.