வெளிநாட்டு ஊழியர்கள் அன்றாடம் கடினமாக உழைக்கின்றனர்; சிரமமான சூழல்களை எதிர்கொள்கின்றனர்.
ஆனால், அவற்றையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் சொந்த இலட்சியங்கள், ஆசைகள், குணநலன்கள் இருப்பதை உணர்த்தும் ‘எலிவேட்டர்’ (மின்தூக்கி) எனும் திரைப்படம், ஆகஸ்ட் 21ஆம் தேதி ‘நெட்ஃபிளிக்ஸ் ஆசியா’வில் வெளியானது.
இது சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் திரைத்துறையினருக்கு இடையேயான கூட்டு முயற்சி.
இவ்வாண்டு ஏப்ரலில் பிலிப்பீன்ஸ் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையேறிய இத்திரைப்படம், ஐஎம்டிபி மதிப்பீடு 7.3/10 உட்பட நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள், கதாநாயகரின் நண்பர்கள் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் சிங்கப்பூர்த் தொலைக்காட்சி, மேடை நடிகர்கள் ஷ்ரே பார்கவா, 29, ரிஷி வட்ரெவு, 26.
அமீர் எனும் பாதுகாப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் ஷ்ரேயும் இக்மால் எனும் ஓட்டுநர் கதாபாத்திரத்தில் ரிஷியும் நடித்துள்ளனர்.
13 ஆண்டுகளுக்கு முன்னர் ராஃபிள்ஸ் கல்வி நிலைய நாடக மன்ற உறுப்பினர்களாக சேர்ந்து நடித்திருந்த இருவரும் மீண்டும் இத்திரைப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.
“ரிஷி உயர்நிலை 1 மாணவராக நாடக மன்றத்தில் சேர்ந்தபோதே அவரிடத்தில் பொதிந்திருந்த அளவற்ற நடிப்புத் திறன் எனக்குத் தெரிந்தது,” என்றார் ஷ்ரே.
தொடர்புடைய செய்திகள்
“என் கதாபாத்திரம் சற்று நகைச்சுவையானது. ஆனால் அந்த நகைச்சுவையின் பின்னணியிலும் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்தப்படும் விதம், அவர்களது இலட்சியங்கள், கனவுகள் குறித்த அம்சங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன,” என்றார் ரிஷி.
இருபது ஆண்டுளுக்கும் மேலாக பல அனைத்துலகத் தொலைக்காட்சி ஒளிவழிகளுக்கு நிகழ்ச்சிகள், ஆவணப்படங்களை எழுதி, இயக்கி, அனைத்துலக விருதுகள் வென்றுள்ள சஞ்சய் ரவி, 46, இத்திரைப்படத்தின் சிங்கப்பூர் தயாரிப்பாளர். இது அவரது முதல் முழுநீளத் திரைப்படம்.
“நெட்ஃபிளிக்ஸ் ஆசியாவில் இத்திரைப்படம் வெளியானது, மேலும் பல திரைப்படங்களை எடுக்க எனக்கு உந்துதலைக் கொடுத்துள்ளது,” என்றார் சஞ்சய்.
கதைக் கரு
சிங்கப்பூர் விடுதியில் மின்தூக்கி இயக்கும் ஜேரட், வெளிநாட்டு ஊழியர்களையும் முதலாளிகளையும் இணைக்கும் செயலியைத் தயாரித்து வருகிறார். அதற்கான முதலீட்டைக் கோரி, தன் விடுதிக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுடன் மின்தூக்கியில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் உரையாடுகிறார்.
ஆனால், அவருக்கும் ஒரு முதலீட்டாளரின் காதலிக்கும் இடையே பூக்கும் காதல், அவரது இலட்சியப் பயணத்தில் குறுக்கிடுகிறது.