அம்மா, மகளுக்கு ஆனந்தம் தரும் தீபாவளி

அம்மா, மகளுக்கு ஆனந்தம் தரும் தீபாவளி

கோப்புப் படம்: டிவி 9 தெலுகு

07 Nov 2026 - 11:08 am

2 mins read

1980களில் தமிழ்ப் திரையுலகிலும் மலையாளப் பட உலகிலும் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை மேனகா சுரேஷ். இவர் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார்.

ரஜினி, மோகன்லால், மம்முட்டி என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த அவர், தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து நடிப்பிலிருந்து விலகினார்.

அண்மைய ஊடகப் பேட்டியில், தனது குடும்ப வாழ்க்கை, சினிமா மறுபிரவேசம் குறித்துப் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் மேனகா.

பள்ளிப் பருவத்திலேயே நடிக்கத் தொடங்கிய மேனகா, பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள் என்பதால் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்.

‘பூச்சாக்கொரொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தின் தயாரிப்பாளரான ஜி.சுரேஷ் குமாரைச் சந்தித்தபோது காதல் மலர்ந்தது. தன் அம்மாவின் அனுமதியோடு திருமண முடிவை எடுத்த அவர், குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் முழு நேரத்தையும் செலவிட முடிவு செய்து, தேடிவந்த வாய்ப்புகளைப் புறக்கணித்து, நடிப்பிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கினார்.

தன் மகள்களான ரேவதி, கீர்த்தி சுரேஷின் வளர்ச்சி குறித்துப் பெருமிதம் கொள்ளும் மேனகா, கீர்த்தியின் காதல் குறித்து அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தாராம்.

“எனினும் பிறகு அதிலிருந்து விடுபட்டு, மாப்பிள்ளையிடம் ஒரு மணி நேரம் பேசிய பிறகு, அவரது நேர்மை எங்களைக் கவர்ந்தது. கோவாவில் நடந்த திருமணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் நடத்தி வைத்தோம்,” என்று கூறியுள்ளார் மேனகா.

இந்தத் தீபாவளி அம்மா, மகள் இருவருக்குமே மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சஞ்சீவ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஒரு கொரியன் கன்ஃபியூஷன்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மேனகா சுரேஷ் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

88 வயதான தன் தாயைப் பராமரிக்க வேண்டும் என்பதால் முதலில் நடிக்கத் தயங்கியதாகவும் மூத்த மகள் ரேவதி ஊக்கமளித்ததால் மீண்டும் கேமரா முன் நிற்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் கீர்த்திக்கும் பல புதிய பட வாய்ப்புகளும் சவாலான பாத்திரங்களும் அமைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரையுலகம்திரைச்செய்தி