தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா வாசுதேவனுக்குக் கைகொடுத்த இசைஞானி

3 mins read
b772852b-9189-47d6-88b1-d0145360a30f
பதினாறு வயதினிலே படத்தில் கமல்ஹாசன் பாடி அசத்தும் காட்சி. - படம்: இந்திய ஊடகம்

தமிழ்த் திரையுலகில் எஸ் பி பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி, சித்ரா, ஜேசுதாஸ், கங்கை அமரன் எனப் பலருக்கும் வாய்ப்பளித்து புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவனுக்கு வாய்ப்பளித்து அவரையும் சிறந்த பாடகராக உருவாக்கிய கதை மிகவும் சுவாரசியமானது.

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவான ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததுன்னு யானைக்குட்டி சொல்லக்கேட்டு பூனைக்குட்டி வந்ததுன்னு...’ என்ற பாடலை முதலில் எஸ் பி பாலாதான் பாடுவதாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அவரது குரல் கட்டியிருக்கவே மலேசியா வாசுதேவனைப் பாடச் சொல்லி பின்னர் அந்தப் பாடலை எஸ் பி பாலாவின் குரலில் பதிவு செய்வதாக இருந்தது. இதனால், பாடலை முதலில் மலேசியா வாசுதேவன் பாடி ஒலிப்பதிவு செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.

அப்பொழுது மலேசியா வாசுதேவனுக்கு திரையுலகில் வாய்ப்பு கொடுத்து அவரைக் கைதூக்கிவிட நினைத்த இளையராஜா, மலேசியா வாசுதேவனிடம், “இதைக் குரல் பதிவு என்று நினைத்துவிடாதே, பாடல் நன்றாக அமைந்தால் இதையே படத்தில் வைத்துக்கொள்வோம்,” என்று கூறி அவருக்கு நம்பிக்கையூட்டினார்.

மலேசியா வாசுதேவனும் மிகுந்த உற்சாகத்துடன் பாடலைச் சிறப்பாகப் பாடினார். அது சாதாரணப் பாடல் அல்ல. படத்தில் கதாநாயகியாக வரும் ஸ்ரீதேவியை மகிழ்விப்பதற்காகப்பாடல் வரிகள் ஏறு, மாறாக இருக்கும். அதில் அர்த்தத்தைப் பார்க்க முடியாது. பாடலைப் பாடிய விதம், காட்சியமைப்பு, நடிப்பு இவற்றை வைத்தே அது ரசிகர்களைக் கவர்ந்தது. பாடல் வரிகளை ரசித்துக் கேட்டால்தான் அது கிராமிய பாணியில் எடக்குமடக்காக, பொழுதுபோக்கிற்காக, உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட பாடல் என்று புரியும். அந்தப் பாடலை அனைவரும் ரசிக்கும்படியாக மலேசியா வாசுதேவனால் மட்டுமே பாட முடியும் என்று எண்ணத் தோன்றும்.

பாடலின் ஆரம்ப வரிகளைத் தொடர்ந்து, “கூத்து மேலே ராசாவுக்கு நூத்திரெண்டு பெண்டாட்டியாம்... என்று தொடர்ச்சியாக, “பட்டத்து ராணி அதிலே பதினெட்டு பேரு, பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்தியாறு, மொத்தம் இருபத்தியாறு...” என்று அர்த்தமில்லாமல் போகும்.

பின்னர், “காக்கையில்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே, பாடெத்து பாடிப்புட்டு ஓட்ட மிட்ட சின்னப்பொண்ணு...” என்று வரும் வரிகளின் இறுதியில் ஒரு வயதான மூதாட்டி திடீரெனப் பாடலுக்குள் நுழைந்து, தனது பழங்காலத்தை நினைவுபடுத்தி பாடுவது , கதாநாயகி ஸ்ரீதேவியை மட்டுமல்லாது நம்மையும் சிரிப்பில் ஆழ்த்தும். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தன்னை பாடகர், நடிகர் எஸ் ஜி கிட்டப்பா, பி யு சின்னப்பா இருவருக்கும் இணையாக நினைத்துக்கொண்டு, “கிட்டப்பாவின் பாட்டைக் கேட்டேன், சின்னப்பாவை நேரிலே பார்த்தேன், கொட்ட கொட்ட வருகுதம்மா, சங்கீதமா பெருகுதம்மா, மேடைக்குப் போனா எனக்கு ஈடில்லை பொண்ணு, பாடினு நின்னா நானும் நூத்துல ஒண்ணு, என் திறமையைக் காட்டட்டுமா, ரெண்டு சங்கதியப் போடட்டுமா” என்று கூறி, பின்னர், “ஆ...ஆ...” என ராகம் போட்டு மலேசியா வாசுதேவன் இழுக்கும்போது உடனே நடுவில் கழுதை ஒன்று கத்தும். அதன்மூலம் அவர் ராகம் போட்டுப் பாடும் பாடல் கழுதை கத்துவதுபோல் இருப்பது என்பதைக் காட்டுவதற்காக என்றாலும் அந்தப் பாடலில் அவர் குரல், பாடும் விதம் அனைத்தும் அதை அவர் எவ்வளவு உற்சாகத்துடன் பாடியிருக்கிறார் என்று தெரிகிறது.

இந்தப் பாடல் பெருவரவேற்பைப் பெற்றது. அது கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதிய விதத்துக்கு மட்டுமல்ல, மலேசியா வாசுதேவன் அது நகைச்சுவையாகப் பாட வேண்டிய பாடல் என்பதை அவர் குரல் மூலம் உணர்த்துவது அவருக்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்தது. அப்புறம் என்ன, படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு இன்னொரு பாடல் வாய்ப்பும் கிடைத்தது. அதுதான், “செவ்வந்திப் பூ பறிச்ச சின்னக்கா, சேதி என்னக்கா...” என்ற பாடல். பி சுசீலா, மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாடலும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று தந்தது. இப்படித்தான் மலேசியா வாசுதேவனுக்கு வாய்ப்பளித்து அவரை முன்னுக்குக் கொண்டுவந்தார் இளையராஜா.

குறிப்புச் சொற்கள்
கண்ணதாசன்திரைச்செய்திபாடல்

தொடர்புடைய செய்திகள்