‘கூலி’ படத்தை விமர்சித்த பலரும் வழக்கம்போல் பட நாயகன் ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. அனைவரும் தவறாமல் குறிப்பிட்ட பெயர் ரச்சிதா ராம்.
‘கூலி’ தொடர்பாக சமூக ஊடக ‘மீம்ஸ்’களிலும் ரச்சிதாவைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. யார் இந்த ரச்சிதா ராம் என்று கேட்பவர்களுக்கு, அடுத்த சில வரிகளில் அவரைப் பற்றிய அறிமுகம்.
‘கல்யாணி’ என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள ரச்சிதா ஒரு கன்னட நடிகை. இவரது சகோதரி நித்யா ராம். இருவரும் கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரச்சிதாவுக்கு எதிர்பாராத வகையில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தர்ஷனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ‘புல்புல்’ என்ற கன்னடப் படத்தில் தர்ஷனுடன் நாயகியாக அறிமுகமான ரச்சிதாவுக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கைகொடுத்தது. ‘புல்புல்’ படத்தின் வசூலைக் கண்டு கன்னடத் திரையுலகத்தினர் மலைத்துப்போக, பிறகு ரச்சிதாவுக்கு ஏற்றம்தான்.
உபேந்திரா, கிச்சா சுதீப், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் எனக் கிட்டத்தட்ட கன்னடத் திரையுலகின் அனைத்து நட்சத்திரங்களுடனும் ரச்சிதா இணைந்து நடித்துவிட்டார்.
இப்போது கன்னட ரசிகர்களின் அபிமான நாயகிகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் ரச்சிதாவுக்கும் இடமுண்டு என்று சந்தேகமே இல்லாமல் கூறலாம்.
“சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ தொடரின் நாயகி நித்யாதான் என்னுடைய சகோதரி. அத்தொடர் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘அண்ணா’ தொடரில் நடித்து வருகிறார் நித்யா.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் தந்தை பிரபல பரதநாட்டியக் கலைஞர். அதனால் இருவரும் அப்பாவிடமே பரதம் கற்றோம்.
“எனது உண்மையான பெயர் பிந்தியா. சினிமாவுக்காக வைத்துக் கொண்டதுதான் ரச்சிதா. ஆனால், கன்னட ரசிகர்கள் என்னை ‘டிம்பிள் குயின்’ என்று பட்டம் சூட்டி அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மனதில் நல்லதோர் இடம் கிடைத்துள்ளது. இதை எனக்குக் கிடைத்த ஆசிர்வாதமாகக் கருதுகிறேன்,” என்கிறார் ரச்சிதா.
கன்னட முன்னணி நாயகியான இவர், ‘கூலி’ படத்தில் சிறு வேடத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்?
இந்தக் கேள்வியை யாராவது கேட்டால் உடனடியாக அவரது பதில் வருகிறது.
“ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பதை எப்போதுமே நான் விரும்ப மாட்டேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன். என் நடிப்பு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுவிடக் கூடாது என்பதில்தான் என் முழுக்கவனமும் குவிந்துள்ளது.
“ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருக்கும்படி பலர் என்னிடம் அறிவுறுத்தினர். ஏனெனில், மக்கள் என்னை வழக்கமான வணிகப் படங்களில் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.
“ஆனால் புதுமையான கதைகளைத் தேர்வு செய்து எனது நடிப்பால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம், ‘ஒரே மாதிரியாக நடிப்பவள்’ என்ற கருத்தை உடைக்க முடியும்.
“அதனால்தான் ‘ஆயுஷ்மான் பவா’, ‘புஷ்பக விமானா’, ‘100’, ‘அயோக்யா’ போன்ற கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்,” என்று விளக்கம் அளிக்கிறார் ரச்சிதா.
கடந்த 2013ஆம் ஆண்டிலேயே இவரது திரைப்பயணம் தொடங்கிவிட்டது. 12 ஆண்டுகளில் கன்னட சினிமாவைத் தாண்டி ஒரேயொரு தெலுங்குத் திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் அறிமுக திரைப்படத்திலேயே எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“அறிமுகப் படத்திலேயே இப்படியான ஒரு பரிமாணத்தில் களமிறங்க பலரும் சற்று தயங்கியிருப்பார்கள். ஆனால், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு தொடர்பான எனது தேடல்தான் ‘கூலி’ பட வாய்ப்பை என்னிடம் கொண்டு வந்திருப்பதாகக் கருதுகிறேன்.
“தமிழ் ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு அலாதியானது. நான் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமானது,” என்று சொல்லும் ரச்சிதா, தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார்.