தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையின் தியாகம் என்னைப் படிக்க வைத்தது: சிவகார்த்திகேயன்

2 mins read
2c978ff0-e296-401b-b835-ee77d64289ad
கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மாணவர்கள், இளையர்களுடன் தொடர்புடைய நல்ல விழா, வளர்ந்துவரும் கலைஞர்களை வாழ்த்தும் விழா என்றால் சிவகார்த்திகேயனைத் தயக்கமின்றிச் சிறப்பு விருந்தினராக அழைக்கலாம். அத்தகைய விழாக்களில் பங்கேற்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார் போலும்.

அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், மாணவர்களுக்குப் பல்வேறு அறிவுரைகளைக் கூறினார்.

‘மதிப்பெண்களுக்காக கொஞ்சம் படியுங்கள். வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்’ என்று அவர் கூறிய அறிவுரை அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.

“வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா, சம்பாதிக்க வேண்டுமா, வீடு, கார் வாங்க வேண்டுமா, பெற்றோரை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமா, மதிப்பு, மரியாதையுடன் வலம்வர வேண்டுமா.. நன்றாகப் படியுங்கள்,” என்றார் சிவா.

இதுபோன்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுதான் முதல் முறை என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இஷ்டப்படி பேசிவிட முடியாது என்றார்.

“இந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவ, மாணவியர் பலர் தங்களுடைய குடும்ப கஷ்டங்களை எடுத்துக் கூறினர். ஒருவேளை உணவில்லை என்று அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டபோது அனைத்தையும் மீறி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அவர்களின் மன உறுதிதான் என்னைக் கவர்ந்தது.

“நான் மூன்று வேளையும் உணவருந்தும் நிலையிலேயே பள்ளிக்குச் சென்று படித்தேன். காரணம், என் தந்தை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு சிரமப்பட்டுப் படித்ததுதான்.

“ஆட்டோ, ரிக்‌ஷா, ரயில், பேருந்து ஆகியவற்றில்தான் பள்ளிக்குச் சென்றேன். ஏனெனில், என் தந்தை நடந்தேதான் பள்ளிக்குச் சென்றார். இப்படி ஒரு தலைமுறையில் ஒருவர் நன்றாகப் படித்தால், அடுத்தடுத்த தலைமுறைகள் நன்றாக இருக்கும் என்பார்கள். அதை என் குடும்பத்தில் நானே நேரடியாகப் பார்த்துவிட்டேன்.

“என் தந்தை வீட்டில் இருந்த வசதிக்கு அவரால் நினைத்ததைப் படிக்க முடியவில்லை. கிடைத்த படிப்பைத்தான் படித்தார். ஒரு பட்டமும் வாங்கினார். ஆனால், அவருடைய மகனான என்னை இரண்டு பட்டங்களைப் பெற வைத்துள்ளார். என் அக்கா மூன்று பட்டங்களைப் பெற்றுள்ளார்.

“எந்தப் பின்னணியும் இல்லாமல் ஒரு துறையில் நுழைந்து சாதிப்பது சாதாரணமல்ல. அதை நான் செய்தேன் என்றால், எனக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் காரணம்.

“என்னிடம் இரண்டு கல்விசார்ந்த பட்டங்கள் உள்ளன. ஒருவேளை சினிமாவில் இருந்து என்னை வெளியே அனுப்பிவிட்டால்கூட ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ள முடியும்,” என்றார் சிவகார்த்திகேயன்.

வாழ்க்கையில் எல்லாருக்குமே கனவுகள் இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தாம் படிக்கும்போது உண்மையாக கல்வி கற்றதாகக் கூறினார்.

“எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. அதனால்தான் இந்தப் பக்கம் வந்துவிட்டேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் கனவு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதை நோக்கி நீங்கள் ஓடுவதையும் கவனிக்கிறேன்.

“உங்கள் ஒவ்வொருவரது கதையும் என் மனத்தில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி உள்ளது,” என்றார் சிவகார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்