தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி, நடிகர் சம்பத் ராஜ் நடிப்பில் வெளிவந்துள்ளது ‘குட் வைஃப்’ இணையத் தொடர். இதனை முதல்முறையாக நடிகையும் இயக்குநருமான ரேவதி இயக்கியுள்ளார்.
இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை அம்ரிதா பேசியபோது, “ஒரு நடிகையாக எனது கனவு நிறைவேறி உள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் பிரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் ஆகியோருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்,” என்றார்.
நடிகர் ஆரி பேசும்போது, “இணையத் தொடரில் நடிப்பது என்பதும் எளிதானது கிடையாது. இதிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போடுவது என்பது சவாலான காரியம்தான். ஒரு படத்தை எடுப்பதை விடவும் பத்து மடங்கு வேலை இதில் இருக்கிறது. அனைத்து குடும்பப் பெண்களுக்கான நியாயத்தை இந்தக் கதை பேசும். ஒரு ‘குட் வைஃப்’ என்பதற்கான வரைமுறை இந்தத் தொடரைப் பார்த்தபின் நிச்சயம் மாறும்,” என்றார்.
நடிகை பிரியாமணி பேசும்போது, “திரைப்படமோ அல்லது இணையத் தொடரோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு வரும் வாய்ப்புகளைத் தவற விடாதீர்கள். நான்காவது முறையாக நான் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரேவதி இயக்கப் போவதை அறிந்தவுடன் உடனடியாக சம்மதித்து விட்டேன். ஜூலை 4ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இந்தத் தொடர் நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றார்.
நடிகை – இயக்குநருமான ரேவதி பேசும்போது, “இதற்கு முன்பு படங்களை இயக்கி இருந்தாலும் இணையத் தொடர் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். ஏனெனில் படம் என்பது இரண்டு மணி நேரத்திற்குள் தொடக்கம், முடிவு என முடிந்துவிடும். ஆனால், இணையத் தொடர் அப்படி கிடையாது. நான் எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். இந்தக் கதை தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ற ஒன்று. இதன் கதையை ஹலிதா மிக அற்புதமாக எழுதி இருந்தார். அதில் சில மாற்றங்களை மட்டும் செய்துவிட்டு முழுக்க முழுக்க ஒரு இயக்குநராக இந்தக் கதையை இயக்கி இருக்கிறேன்,” என்றார்.

