கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துகிறார் சாய் தன்ஷிகா. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ இணையத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுதான் அவர் நடிக்கும் முதல் இணையத்தொடராம். திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை என்கிறார்.
“எனக்குத் தெரிந்து ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளதாகக் கருதுகிறேன். இணையத் தொடரில் அனைத்து கதாபாத்திரங்களும் அழுத்தமானதாக உள்ளன.
“நான் நடித்த ‘ஐந்தாம் வேதம்’ தொடரில் எனது கதாபாத்திரம் அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. மொத்தம் ஐந்து மாதங்கள் படப்பிடிப்பில் பங்கேற்றேன். அப்போது இயக்குநர் நாகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.
“அவர், ‘மர்ம தேசம்’, ‘சிதம்பர ரகசியம்’ எனப் பல தொலைக்காட்சித் தொடர்கள், ‘அந்தப்புரத்து வீடு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்,” என்கிறார் சாய் தன்ஷிகா.
இந்த இணையத் தொடரின் படப்பிடிப்புக்காக, காசி, கும்பகோணம், ஏலகிரி மலை எனப் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டாராம்.
காசிக்குப் பயணம் மேற்கொண்டது ஒரு புனித யாத்திரைக்கு சென்று வந்த அனுபவத்தைப்போல் இருந்ததாகப் பரவசப்படுகிறார்.
“கங்கையில் ஆரத்தி பார்த்ததும் அங்கேயே என் பிறந்தநாளைக் கொண்டாடியதும் மறக்க முடியாத அனுபவங்கள். நாங்கள் சென்ற சில இடங்களில் புலிகளும் யானைகளும் நடமாடுவது வழக்கம் என்று சிலர் கூறியபோது திகிலாகவும் இருந்தது,” என்று பயம் கலந்த பார்வையுடன் பயண அனுபவங்களை விவரிக்கிறார் சாய் தன்ஷிகா.
தொடர்புடைய செய்திகள்
காட்டுப் பகுதிகளில் இவரைப் ‘புல்லட்’ ஓட்ட வைத்தார்களாம். இப்படி சிரமப்பட்டு நடித்தாலும் இணையத் தொடரைப் பார்த்த அனைவருமே ‘அருமை’ என்று பாராட்டியபோது மனம் மகிழ்ச்சியில் நிறைந்ததாம்.
2023ஆம் ஆண்டு வெளியான ‘லாபம்’ படத்துக்குப் பிறகு சாய் தன்ஷிகாவை வெள்ளித்திரையில் அதிகம் பார்க்க முடியவில்லையே என்று கேட்டால், “உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நினைத்துவிடாதீர்கள்,” என்று அவரது பதில் வேகமாக வெளிப்படுகிறது.
“எப்போதுமே நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டுமென நினைப்பேன். இப்போது ஓடிடி தளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. பல இளம் இயக்குநர்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வருகிறார்கள்.
“அதுபோன்ற படைப்புகளில் நானும் பங்கேற்றால்தான் திரை உலகில் நீடித்து, நிலைத்து நிற்க முடியும். அதனால் கதைகளை மிகக் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதனால்தான் தாமதம் ஏற்படுவதாக கருதுகிறேன்,” என்று சொல்லும் சாய் தன்ஷிகா, திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
இவரது மாமா அருண் பல ஆண்டுகளுக்கு முன்பு சிம்ரன், ஜோதிகா ஆகியோருக்கு மேலாளராகப் பணியாற்றியவர். அதனால் தம்மால் திரையுலகுக்குள் எளிதில் நுழைய முடிந்ததாகச் சொல்கிறார்.
“உண்மையில் கணினிப் பொறியாளராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே ‘பேராண்மை’ பட வாய்ப்பு தேடி வந்தது.
“இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ஒரு பேராசிரியரைப் போல் எனக்கு சினிமா குறித்து பாடம் நடத்தினார். பல நுணுக்கங்களைக் கற்றுத்தந்து கேமரா முன்பு நடிகையாக என்னை நிறுத்தினார். அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ‘அரவான்’, ‘பரதேசி’, ‘கபாலி’, ‘இருட்டு’ ஆகிய படங்களில் எனது நடிப்பு நன்றாக இருப்பதாக பலர் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு அப்படங்களின் இயக்குநர்கள்தான் காரணம்.
“‘கபாலி’ படத்தில் எனது சிகையலங்காரம் பிரமாதம் எனப் பலரும் பாராட்டினர். ரஜினியின் மகளாக நடித்தது பெரும் பாக்கியம்.
“சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்திட வேண்டும் என விரும்பினேன். இந்நிலையில் அவர் நாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் வில்லி வேடம் அமைந்தது.
“இப்படி என் வாழ்க்கையில் பல விசயங்கள் தன்னால் நடந்தன. எனக்கு எப்போதுமே என்னுடைய கதாபாத்திரம்தான் முக்கியம். நல்ல பாத்திரம் அமைந்தால் அதுவாகவே மாற வேண்டும் என நினைப்பேன்.
“அதற்காக நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என பிடிவாதம் பிடித்ததில்லை. தெலுங்கில் கடந்த ஆண்டு ‘அந்திம தீர்ப்பு’, ‘தக்ஷினா’ ஆகிய படங்கள் வெளியாகின.
“மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘சோலோ’, கன்னடத்தில் ‘உத்கர்ஷா’ என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளேன். எனினும் இப்போது என் கவனம் முழுவதும் தமிழ்த் திரை உலகின் பக்கம் திரும்பியுள்ளது,” என்று சொல்லும் சாய் தன்ஷிகா தற்போது ‘யோகிடா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளாராம்.

