தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் இந்தித் திரையுலகத்தினர் தன்னைப் பற்றி இளக்காராமாகப் பேசி சிறுமைப்படுத்தியதாகச் சொல்கிறார் நடிகை ஆண்ட்ரியா.
அண்மையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவர் தென்னிந்தியக் கலைஞர்களுக்கு எதிராகப் பாலிவுட்டில் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆண்ட்ரியாவுக்கு இந்தியில் நன்கு எழுத, படிக்க, பேசத் தெரியுமாம். பல இந்திப் படங்களில், தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்குத் தானே பின்னணிக்குரலும் கொடுத்திருக்கிறார்.
“ஆனால், தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரே காரணத்தால் எனது மொழி உச்சரிப்பு, பின்னணி ஆகியவற்றைக் கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினர். அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதுமுக நடிகைபோல் நடத்தினார்கள்,” என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா.
இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கைகளை நேர்மை என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள், தென்னிந்திய நடிகர்கள் அதுபோல் நடந்துகொண்டால் மட்டும் தலைக்கனம் பிடித்தவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பணியாற்றினாலும் தமது இதயம் தென்னிந்திய சினிமாவில்தான் உள்ளது என்றும் அதுவே தமது வீடு என்றும் ஆண்டிரியா மேலும் கூறியுள்ளார்.

