என் மனைவிதான் என் முதலாளி; ‘பேபி ஜான்’ பட விழாவில் அட்லீ நெகிழ்ச்சி

2 mins read
5697525f-97a4-49b3-b23c-8b9d1d67624b
விஜய்யுடன் அட்லீ, பிரியா தம்பதியர். - படம்: ஊடகம்

‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்துள்ளார் இயக்குநர் அட்லீ.

இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தியில் அட்லீ இயக்கும் இரண்டாம் படம் இது.

கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி பெற்றதை அடுத்து, சல்மான் கானை வைத்து இவர் படம் இயக்குவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அட்லீயே தயாரித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தில் சல்மான் கான் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

அட்லீயின் மனைவி பிரியாதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்றும் அவர்தான் தனது முதலாளி என்றும் அண்மையில் நடைபெற்ற ‘பேபி ஜான்’ முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டின்போது அவர் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ஷாருக்கான் இல்லையென்றால் தம்மால் இந்தித் திரையுலகத்துக்கு வந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார் அட்லீ.

அடுத்து, நடிகர்கள் விஜய், சல்மான் கான் ஆகியோரும் தனது வளர்ச்சிக்கு காரணமானவர்கள் என்று தெரிவிக்கவும் அவர் மறக்கவில்லை.

ஆனால், தமிழில் அட்லீக்கு இரண்டு முறை வாய்ப்பு தந்து அவரது மதிப்பை உயர்த்தியவர் விஜய். அவருக்கு நன்றி தெரிவிக்கும்போது ஏன் அவரது பெயரை முதலில் குறிப்பிடவில்லை என விஜய் ரசிகர்கள் சிலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனால் மன வேதனை அடைந்த அட்லீ, தாம் எந்தவித உள்நோக்கத்துடனும் இவ்வாறு பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“விஜய்தான் எனது வளர்ச்சிக்கு காரணமானவர் எனப் பலமுறை கூறியுள்ளேன். ஆனால், பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க அங்குள்ள முன்னணி கதாநாயகர்களின் ஆதரவு மிக அவசியம். அதனால்தான் ஷாருக்கான் பெயரை முதலில் குறிப்பிட்டேன்,” என்று விளக்கினாராம் அட்லீ.

இதற்கிடையே, அட்லீ மிகத் திறமையானவர் என்று ‘பேபி ஜான்’ படத்தின் நாயகன் வருண் தவான் கூறியுள்ளார்.

“அட்லீயின் திறமை குறித்து ‘ஜவான்’ திரைப்படம் வெளியாகும் முன்பே எனக்குத் தெரியும். அதனால்தான் அவரது இயக்கத்தில் தயக்கம் இல்லாமல் நடிக்க முடிந்தது,” என்கிறார் வருண் தவான்.

இதனால் நெகிழ்ந்துபோன அட்லீ, “மற்ற அனைவருமே ‘ஜவான்’ படம் வெளியான பிறகுதான் என் மீது நம்பிக்கை கொண்டனர். ஆனால், வருண் அதற்கு முன்பே என்னை முழுமையாக நம்பினார். ‘அனிமல்’ படம் எப்படி ரன்பீர் கபூருக்கு பெயர் வாங்கிக்கொடுத்ததோ, அதேபோல் ‘பேபி ஜான்’ படம் வருணுக்குப் பெயர் வாங்கித் தரும்,” என்று பட நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார் அட்லீ.

குறிப்புச் சொற்கள்