தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையராஜா பாடல்கள் எழுதி இழைத்த படம் ‘மைலாஞ்சி’

2 mins read
c0c7431c-b274-402f-985b-79d30e36f954
‘மைலாஞ்சி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு காதல் படமாக உருவாகிறது ‘மைலாஞ்சி’.

“காதல் வயப்பட்ட இரண்டு உயிர்களுடைய நுண்ணுணர்வுகளின் சிக்கலில் உருவாகி வந்த கதை இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம்,’‘ என்று கவிதையைப் போல் படத்தின் கதையை விவரிக்கிறார் அறிமுக இயக்குநர் அஜயன் பாலா.

அடிதடியுடன் கூடிய அதிரடிப் படங்கள் வெற்றிபெறும் காலகட்டத்தில் எதற்காகக் காதல் படம் என்று இவருக்கு நெருக்கமானவர்களே கேள்வி கேட்கிறார்களாம்.

தயாரிப்பாளர் அர்ஜுனனிடம் ஐந்து கதைகளை விவரித்ததாகவும் அவற்றுள் நகைச்சுவை, ஆக்‌ஷன், காதல் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள் இருந்ததாகவும் சொல்கிறார் அஜயன் பாலா.

“ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தது ‘மைலாஞ்சி’ தான். காதல் கூடுவதில் பிரச்சினை வர, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஒன்றுகூடினார்கள் என்ற கதையில் காதல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் விதத்தைச் சொல்லியிருக்கிறேன்.

“இத்தனை கோடி மனிதர்களிடம் அத்தனை கோடி காதலும் இருக்கிறது. அதில் வித்தியாசமான இரண்டு பேர் சந்திக்கும் போதுதான் அது கதையாகிறது.

“நல்ல உள்ளம் கொண்ட அவர்களே தங்களுக்கான தடைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்தத் தடைகளை விலக்க முயலும் போது இன்னும் சிக்கல் அதிகமாகிறது. மொபைல் இல்லாத காலம் தொட்டு இப்போது அதன் ஆதிக்கம் இருக்கிறவரை அப்படி சிக்கல்களோடுதான் தொடர்கிறது.

“எவ்வளவோ கண்டுபிடிப்புகள் வெளியே வந்த இந்தக் காலத்திலும் இவ்வுலகில் மேலும் மேலும் சிக்கலாகிக் கிடப்பது காதல்தான். அப்படிப்பட்ட ஒரு காதல் கதையைத்தான் இப்படத்தில் விவரிக்கிறோம்,” என்கிறார் அஜயன் பாலா.

இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். பறவைகளைப் படம்பிடிக்கும் புகைப்படக்காரராகவும் இயற்கை விரும்பியாகவும் திரையில் தோன்றுவாராம்.

ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் சாயலில் நாயகியைத் தேடியபோது, கிரிஷா குருப் இயக்குநரின் பார்வையில் பட, உடனே அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். ‘மைலாஞ்சி’ பறவைகளை விற்பனை செய்யும் கடையை நடத்துபவராக வருகிறார் கிரிஷா.

முனீஸ்காந்த், சிங்கம்புலி, பிரபல ஆடை வடிவமைப்பாளர் தாட்ஷா ஆகியோர் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

“ஒரு நல்ல காதல் படத்தை ரசிகர்கள் வசம் கையளிப்பேன் என்பதில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்.’‘

“முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தின் இசையமைப்பில் இளையராஜா அழகிய பங்காற்றி உள்ளார். அவரே பாடல்களும் எழுதி இழைத்த படமாக இது அமைந்துள்ளது.

“காதலை அள்ளிக்கொண்டு போய் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட வைத்திருக்கிறது ராஜாவின் இசை. காதலை விடவும் மகிழ்ச்சியான ஒன்றை கடவுள் இன்னும் இந்த பூமிக்குக் கொடுக்கவில்லை. கடவுளுக்கு நன்றி, காதலுக்கும் நன்றி,” என்று காதலுடன் சொல்கிறார் அஜயன் பாலா.

குறிப்புச் சொற்கள்