தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படத்தின் கதையைத் துணிச்சலாகப் பகிர்ந்த மிஷ்கின்; பாராட்டும் ரசிகர்கள்

2 mins read
3ba04e2b-006c-466b-ab1b-ad0c73c55b31
மிஷ்கின். - படம்: ஊடகம்

‘டிராகன்’ படத்தில் மிஷ்கின் வெளிப்படுத்திய நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுகள்.

பிறகென்ன... இப்போது அவர் காட்டில்தான் வாய்ப்பு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

அடுத்து, துல்கர் சல்மானுடன் ‘ஐயம் கேம்’ என்ற படத்தில் கைகோத்திருக்கிறார். ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கும் படம் இது.

படப்பிடிப்புக்காக இப்போது திருவனந்தபுரம் பறந்திருக்கிறார் மிஷ்கின்.

இதற்கிடையே, பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்கும் ‘எல்ஐகே’ படத்தில் இவர் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.

“வழக்கம்போல் இதிலும் மிஷ்கின் நடிப்பு அருமை. இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும்,” என்கிறார் ‘எல்ஐகே’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இதற்கிடையே, இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டிரெயின்’ படத்தின் கதைச் சுருக்கத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார் மிஷ்கின்.

‘டிரெயின்’ படத்தில் விஜய் சேதுபதியும் ஷ்ருதி ஹாசனும் நடித்துள்ளனர்.

அண்மையில் ஓர் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், இப்படத்தின் வெளியீட்டைத் தாம் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகக் கூறினார்.

பெரும்பாலான இயக்குநர்கள் தங்களுடைய படத்தின் கதையை யாரிடமும் பகிர மாட்டார்கள். ஆனால், மிஷ்கின் தனது அடுத்த படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தைப் பற்றியது என்றார்.

“ஒரு ராட்சதப் புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளைச் சுமந்துகொண்டு, தவழ்ந்து தவழ்ந்து சென்று பத்திரமாக வெளியே விடுகிறதோ, அப்படித்தான் இந்த ‘டிரெயின்’ படமும் இருக்கும்.

“வாழவே விருப்பம் இல்லாத கதாநாயகன், தமது இறப்பை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருப்பான். அப்போது மேற்கொள்ளும் ரயில் பயணம் அவனுடைய வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதுதான் ‘டிரெயின்’ படத்தின் கதைச்சுருக்கம்,” என்றார் மிஷ்கின்.

அவரது இந்தத் துணிச்சலை சினிமா ரசிகர்கள், சமூக ஊடகங்களில் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்