ஐம்பதாவது திரைப்படத்தை நெருங்கியுள்ள நந்திதா

ஐம்பதாவது திரைப்படத்தை நெருங்கியுள்ள நந்திதா

1 of 2
படம்: கே4 ஃபேஷன்
படம்: கே4 ஃபேஷன்

06 Nov 2026 - 3:44 pm

2 mins read

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘அட்டகத்தி’ படத்தின் வழியாகத் தடம்பதித்து, தமது இயல்பான நடிப்பால் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுபட்டி’ உள்ளிட்ட பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துத் திரையுலகில் தமக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள அவர், தற்போது ஐம்பதாவது திரைப்படத்தை நெருங்கியுள்ளார்.

தமது திரைப்பயணம் குறித்து அவர் அண்மையில் அளித்த நேர்காணலில் பல விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய நடிகர்கள் களமிறங்குகிறார்கள். புதிய தலைமுறைப் பிள்ளைகள் இந்தத் துறைக்கு வந்துவிட்ட இக்காலச் சூழலில், 14 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாகத் தொடர்வது பெரிய விஷயம் என்பேன். எனக்குள்ள அடையாளம், அங்கீகாரம் எல்லாமே திரைப்படம் தந்ததுதான். எனினும், இந்தப் பயணம் எளிதன்று,” என்று வெளிப்படையாகவும் பெருமிதத்துடனும் கூறியுள்ளார் நந்திதா.

“காவல்துறை பாத்திரத்தில் நடித்தால் வரிசையாக அதே போன்ற வாய்ப்புகள் வரும். ஒரு பாடலுக்கு நடனமாடினால் அதையே திரும்பக் கேட்பார்கள். இத்தகைய வழக்கங்களை விடுத்து வேறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்தால், திரைப்படங்கள் இல்லாமல் சிறிய இடைவெளி விழுந்துவிடுகிறது,” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

திரைப்பட நாயகியாக விளங்குவது எளிதன்று என்றும் உடற்பயிற்சியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள நந்திதா, உணவுக் கட்டுப்பாட்டைப் பேணுவதும் நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்கூடத்தில் வியர்வை சிந்துவதும் ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதது என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

தற்போது சசிகுமாருடன் புதிய கதைக்களத்தில் நடித்து வரும் நந்திதா, கன்னட மொழியில் முழுமையான சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்காகப் பல இடர்களைக் கடந்து சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறும் அவர், தனது ஐம்பதாவது திரைப்படம் தமிழ்ப் படமாக அமைய வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

“சசிகுமாருடன் நடிப்பது திகில் வகையைச் சார்ந்த படம். கன்னடத்தில் பாடலாசிரியராவும் இயக்குநராவும் உள்ள ஹரி சந்தோஷ் இயக்குநராகத் தமிழில் அறிமுகமாகும் படம் இது.

“மேலும், கன்னடத்தில் ‘த ரேஜ்’ என்ற படத்தில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் அப்படத்தில் அதிரடிக் காட்சிகளிலும் நடித்துள்ளேன்,” என்றார் நந்திதா.

குறிப்புச் சொற்கள்