ஷாரூக்கானை அடுத்து, சல்மான் கானுடனும் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா.
இருவரும் இணையும் படத்துக்காக நயன்தாராவுக்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த ‘ஜவான்’ படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தமிழில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி, அடுத்து இந்திப் படத்தை இயக்கத் தயாராகி உள்ளார்.
சல்மான் கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், தீபிகா படுகோன் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் அவரிடம் படத் தயாரிப்புத்தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடராமல் இயக்குநர் வம்சியிடமே நாயகியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது.
இதையடுத்து, நயன்தாராவிடம் படத்தின் கதையைச் சொல்லி, வம்சி தேதி கேட்க, பதிலுக்கு நயன்தாராவும் பத்து விரல்களைக் காண்பித்து சம்பளம் கேட்க, ஒப்புக்கொண்டாராம் வம்சி.
இனி, ஆண்டுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் நயன்தாரா.

