தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனப் பெயரெடுத்த இவருக்கு, அண்மைக்காலமாகச் சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றிப் படங்கள் அமையவில்லை.
அவர் நடித்து வெளியீடு கண்ட அண்மைய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் தொடர்ந்து ஏமாற்றத்தையே அளித்துள்ளன.
கடந்த வாரம் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக வெளியீடு கண்ட ‘மூக்குத்தி அம்மன்-2’ திரைப்படம், வசூல் ரீதியில் பெரும் சறுக்கலைச் சந்தித்துள்ளது.
பிற மொழிகளில் அப்படத்துக்கு அறவே வரவேற்பு இல்லாத நிலையில், தமிழகத்திலும் ஏறக்குறைய 15 கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமான வசூலை மட்டுமே ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இதற்கு முன்பு தமிழில் வெளியான ‘ஹாய்’ திரைப்படமும் வெற்றி பெறவில்லை.
நயன்தாராவின் கடந்த சில ஆண்டுகாலத் திரைப்பயணத்தைப் புரட்டிப் பார்த்தால், தொடர் தோல்விகளே மிஞ்சுகின்றன.
கடந்த ஆண்டு நேரடியாக ‘ஓடிடி’ தளத்தில் வெளியீடு கண்ட ‘டெஸ்ட்’ திரைப்படம் பெரிதாகப் பேசப்படவில்லை. 2024ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் ஒரு படம்கூட வெளியாகவில்லை. அதற்கு முன்பாக 2023ல் வெளியான ‘அன்னபூரணி’, ‘இறைவன்’, 2022ல் வெளிவந்த ‘கனெக்ட்’, ‘ஓ2’ ஆகிய படங்களும் ரசிகர்களைக் கவரத் தவறின.
2022ல் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மட்டுமே சுமார் வெற்றியைப் பெற்றது. 2021ல் ‘அண்ணாத்த’, ‘நெற்றிக்கண்’, 2020ல் ‘தர்பார்’ எனத் திரையரங்குகளில் வெளியீடு கண்ட படங்கள் அனைத்தும் சறுக்கின.
சொல்லப்போனால், 2019ல் விஜய்யுடன் இணைந்து நடித்த ‘பிகில்’ படமே தமிழில் அவருக்குக் கடைசியாகக் கிடைத்த மாபெரும் திரையரங்க வெற்றியாகும்.
அதே சமயம், பிற மொழிகளில் நயன்தாராவுக்குக் கலவையான சூழலே நிலவுகிறது. 2023ல் இந்தியில் வெளியீடு கண்ட ‘ஜவான்’, இந்த ஆண்டு தெலுங்கில் வந்த ‘மனஷங்கர வரபிரசாத் காரு’ ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்தன.
ஆனால், கன்னடத்தில் உருவாகி பல்வேறு இந்திய மொழிகளில் திரைகண்ட ‘டாக்சிக்’ படுதோல்வியைத் தழுவியது.
பிற மொழிகளில் அவ்வப்போது வெற்றிகளை ருசித்தாலும், தன்னை உச்சத்தில் வைத்த தமிழ்த் திரையுலகில் நயன்தாரா மீண்டும் ஒரு வலுவான வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
