அஜித்தைப் போன்ற வசீகரமான ஒருவரை என் வாழ்வில் பார்த்ததில்லை என்று ஏராளமான தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா கூறியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில், அஜித் குமாருடன் ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நேர்காணல் ஒன்றில் ‘விடாமுயற்சி’ படம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ரெஜினா. “திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு முன்பு நான் அஜித்தை சந்தித்ததில்லை. எல்லோரையும் போலவே நானும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தேன்.
“விடாமுயற்சி படப்பிடிப்பில் நேரில் பார்த்தபோதுதான், உண்மையில் அவரைப் போன்ற ஒரு வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை என்பதை உணர்ந்தேன். இயக்குநர் மகிழ்திருமேனி படத்தைச் சிறப்பாக இயக்கியுள்ளார். 90% படம் அஜர்பைஜானில் எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய கதாபாத்திரத்தை திரையில் காண்பதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, நடிகர் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.

