நடிகர் பவன் கல்யாண் மக்களை ஈர்க்கும் காந்தம் போன்றவர் என்றும் வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாதவர் என்றும் கூறியுள்ளார் நடிகை நிதி அகர்வால்.
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரான பவன், அண்மையில் நடித்த ‘ஹரிஹர வீரமல்லு’ படம் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. பவன் ஜோடியாக நடித்திருந்தார் நிதி அகர்வால்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தெலுங்கு மக்கள் பவன் கல்யாணைக் கடவுளைப் போல் பார்ப்பதாக நிதி குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் அதிகம் பேசாத விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லும் துணிவு பவனிடம் உள்ளது. அதனால் வெற்றி தோல்விகள் அவரைப் பாதிக்கவில்லை.
“ஒருநாள் அவர் இந்தியாவின் பிரதமரானாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் உள்ளன. ஒரே நேரத்தில் அரசியல், திரைத்துறை எனச் செயலாற்றுவது எளிதல்ல.
“பவன் கல்யாண் உண்மையாகவே மக்களுக்காக உழைக்கிறார். மக்கள் பிரச்சினைகளைக் கேட்டு தீர்த்து வைப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் எதையுமே விளம்பரத்துக்காகச் செய்வதில்லை,” என்று கூறியுள்ளார் நிதி அகர்வால்.

