இந்தாண்டில் இதுவரை ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த மூன்று மாதங்களில், மேலும் 50 படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரசிகர்களுக்கு இத்தகவல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.
ஏனெனில், இந்த மூன்று மாதங்களில் முன்னணி நாயகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என்பதுதான்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் பெரிய படம் என்றால், அது தனுஷ் நடிப்பில் அக்டோபர் 1ஆம் தேதி வெளியீடு காணவுள்ள ‘இட்லி கடை’ படம்தான். அதன் பிறகு தீபாவளி பண்டிகையின்போது சில படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவை அனைத்துமே வளரும் கதாநாயகனின் படங்கள்தான்.
பின்னர் ஆண்டு இறுதி வரை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள்.
இத்தகவல் தீவிர சினிமா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்றாலும் தயாரிப்பாளர்களும் புது இயக்குநர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
பெரிய படங்கள் வெளிவராத காரணத்தால் சிறிய படங்களுக்கு அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே பொங்கல் பண்டிகையையொட்டி, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில்தான் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படமும் திரைகாண்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ரஜினி நடித்துவரும் ‘ஜெயிலர்-2’ படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகும் நிலையில், அஜித், கமல், விக்ரம் ஆகியோர் நடிக்கும் புதுப் படங்கள் குறித்த அறிவிப்பும் அடுத்த ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோரின் புதுப் படங்கள் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில், விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
வழக்கமாக, தீபாவளிப் பண்டிகையின்போது அதிக எண்ணிக்கையிலான படங்கள் திரைகாணாவிட்டாலும் முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்த ஆண்டு இத்தகைய படங்களில் ஒன்றுகூட தீபாவளிக்கு வெளியாகவில்லை. எனவே, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் கோடம்பாக்கத்தில் புதுப் படங்களுக்கான வெளியீட்டுப் போட்டி களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.