தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பாடல்களை அளித்து சிறந்த பாடலாசிரியராகத் திகழ்ந்த கவிஞர் நா. முத்துக்குமார் மறைந்தாலும் அவருக்கு உதவி செய்ய வேண்டியது தம் கடமையெனத் தாம் எண்ணியதுண்டு என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி ‛ஆனந்த யாழை’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் முத்துக்குமாருடன் பணியாற்றிய இசையமைப்பாளர்களான கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயண் உள்ளிட்டோருடன் அவருடன் திரைப்படங்களில் பணிபுரிந்த நடிகர்கள், தயாரிப்பாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், முதன்முதலில் இயக்குநர் நெல்சன் படத்தில் பாடல் எழுதியபோது தனக்கு கிடைத்த வருமானத்தை முத்துக்குமாரின் குடும்பத்திற்கு அளித்ததாக நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், ‘‘பாடல் எழுத நான் எப்போது சென்றாலும் முத்துக்குமாரின் இரண்டு பாடல்களைக் கேட்டபின்பு தான் எழுதச் செல்வேன். பாடலாசிரியர்கள் பலர் இருந்தாலும் பாடலாசிரியர் முத்துக்குமார் போல் பாடல் இயற்ற ஆளில்லை,’‘ என்று புகழஞ்சலி செலுத்தினார்.

