தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.
பல ரசிகர்களுக்கு அவர் கனவுக்கன்னியாகவே மாறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் தொடர்ந்து ஜோடியான மீனா மறுபக்கம் அப்போது வளர்ந்துவந்த நடிகராக இருந்த அஜித் உள்ளிட்டோருடனும் ஜோடியாக நடித்தார்.
வெற்றி நடிகையாக வலம்வந்தபோதே வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.
இந்தச் சூழலில் தன்னிடம் இந்தியில் பேச சொன்ன செய்தியாளரைப் பார்த்து கடிந்துகொண்டார் மீனா. அந்தக் காணொளி தற்போது இணையத்தில் பரலாகி வருகிறது.
அண்மையில், திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார் மீனா. அப்போது பேசிய அவரிடம்,”தென்னிந்திய மொழியில் வேண்டாம், இந்தியில் பேசுங்கள்,” என்று செய்தியாளர்கள் கூறினர்.
அப்படி கேட்டதற்காக அவர்களைக் கடிந்துகொண்ட மீனா, “இந்தியில்தான் பேச வேண்டும் என்றால் எதற்காக என்னை கூப்பிட்டீர்கள். தென்னிந்தியர்கள் மட்டும்தான் வருகிறார்கள் என்று நினைத்தேன்” என சொல்லிவிட்டு, “தென்னிந்திய மொழி படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் ரொம்பவே பெருமைப்படுகிறேன்,” எனக் கூறிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

